திருக்கணித பஞ்சாங்கத்தின்படி குரு பகவான் சரியாக 30-3-2020 அன்று அதிகாலை 3.10 நிமிடங்களுக்கு, தனுசு ராசியிலிருந்து அதிசாரமாக மகர ராசிக்கு பிரவேசிக்கிறார்.
இந்த அதிசார குரு பெயர்ச்சியால் மேஷம் முதல் கன்னி வரை 6 ராசிக்காரர்களுக்கு என்னென்ன யோகங்கள் கிடைக்கும் என்று ஜோதிடர் N.C.கிருஷ்ணன் நாயுடு எழுதியுள்ளார்.
இந்த புது பலன்களை சுய ஜாதகத்தோடு ஒப்பிட்டுப் பார்த்து இறுதி பலன்களை முடிவு செய்வது நல்லது. கிரக மண்டலத்தில் இயற்கை சுபரான ஒரு பெரிய கிரகம் குரு பகவானாவார்.
ஆகையால் அவருடைய பெயர்ச்சிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. தற்போது ஒரு நிகழ்வாக குரு பகவான் அதிசாரமாக, தன்னுடைய மூலத்திரிகோண வீடான தனுசு ராசியில் இருந்து தன்னுடைய நீச வீடான மகர ராசிக்கு பயணிக்கிறார்.
சரி இப்போது இந்த அதிசார பெயர்ச்சியால் என்னென்ன விளைவுகள் நிகழும் என்று பார்க்கலாம்.
மேஷம்
அதிசார நிகழ்வால் மேஷ ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் ஆட்சி பெற்றிருந்த, குரு பகவான் தற்போது பத்தாம் வீடான மகரத்தில் சஞ்சரிக்கப் போவதால், அவர்கள் ராசிக்கு கிடைத்த குரு பார்வை,தற்காலிகமாக கிடைக்காது.
அதனால் சுபநிகழ்ச்சிகள் சற்று தாமதம் ஆகலாம். ஆனால் முயற்சிகள் செய்து கொண்டிருக்கலாம். குருபகவான் பத்தில் இருக்கும் சனிபகவானுக்கு சுபத்துவம் அளிப்பதால், உங்கள் வேலைப்பளு சற்று குறைந்து காணப்படும்.
மேலும் ஆன்மிக பயணங்கள் மேலோங்கும். தங்களுடைய தாயார் மற்றும் துணைவியாரை சற்று அனுசரித்துப் போவது நல்லது.
ரிஷபம்
உங்கள் ராசிக்கு அட்டமாதிபதி குரு பகவான் 9ம் இடத்தில் சற்று பலவீனம் ஆவதும், அங்கே சனி பகவான் இருப்பதும் உங்களுக்கு சாதகமான அமைப்பாகும்.
தொழில் மூலம் லாபங்கள், மேலும் சிறு பயணங்கள் அதன்மூலம் எதிர்பாராத சில பணவரவுகள் லாபங்கள் கிடைக்கப் பெறலாம்.
மேலும் எதிரி தொல்லைகள், கடன் சுமையில் தத்தளித்த உங்களுக்கு, இந்த சிறிய மாற்றங்கள் நல்லதே செய்யும் அமைப்பாக அமைந்துள்ளது.. இதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
மிதுனம்
குருவும் சனியும் உங்களுடைய ராசிக்கு அஷ்டம ஸ்தானத்தில் பிரவேசிக்கப் போகிறார்கள். உங்கள் ராசிக்கு சமசப்தமாக கிடைத்த குருபார்வை தற்காலிகமாக கிடைக்கப் பெறாது. இது ஒரு சிறிய குறையாக இருந்தாலும், முன்பு தனுசுவில் இருந்த சனிபகவான் விலகி விட்டதால், உங்களுக்கு பெரிய அளவுக்கு, ராகு பகவானால் கஷ்டங்கள் ஏற்படாது.
இருப்பினும் சுப காரியங்கள் சிறிது காலம் தாமதம் ஆகலாம் ஆனால் முயற்சிகளை செய்து கொண்டே இருக்கலாம்.
அதேபோல தொழில் மற்றும் குடும்பத்தில் சற்று பின்னடைவை சந்தித்தவர்களுக்கு ,இந்த காலகட்டம் ஒரு ஆறுதலாக இருக்கும்.அஷ்டம சனியின் தாக்கம் மேலும் பலவீனமடையும்.
கடகம்
கடக ராசி அன்பர்களே! கண்ட சனியின் தாக்கம் சற்று பலவீனமடையும்.மேலும் சனியின் பார்வை சற்று சுபத்துவம் ஆகி இருப்பதால் உங்களுக்கு ஏற்பட்ட அந்த மந்த நிலை நீங்கி, சற்று சுறுசுறுப்பாவீர்கள்.
மேலும் தந்தை வழி தந்தை வழி சொத்துக்கள் சிறப்படையும். மகரம் ராசியில் குரு/சனி சேர்க்கை உங்களுடைய சுக ஸ்தானத்தைப் பார்ப்பதால் உங்களுக்கு வீடு வாகனம் யோகங்கள் ஏற்படும். ஒரு முறைக்கு இருமுறை சிந்தித்து செயல்படுவது சிறந்தது.
சிம்மம்
இதுவரை தங்களுக்கு கிடைத்துக் கொண்டிருக்கும் குரு பார்வையானது, சற்று விலகப் போகிறது..மேஷம், மிதுன ராசி அன்பர்களை போலவே, உங்களுக்கும் சுபகாரியங்கள் தாமதம் ஆகலாம்.
ஆனால் முயற்சிகளை விட வேண்டாம். தற்போது உங்களுடைய ,சத்ரு ஸ்தானத்தில் குரு பகவானும் சனி பகவானும் சேர்ந்திருப்பதால், சனி சுபத்துவம் ஆகி, எதிரிகளின் பிரச்சனைகளில் இருந்து உங்களை விடுவிப்பார் மேலும் எட்டாம் இடத்தை பார்ப்பதால் வயதானவர்களுக்கு உடல் ஆரோக்கியம் மேலோங்கும் ஆன்மீக சிந்தனையும் சிறக்கும்.
மேலும் சேவை சார்ந்த பணியில் இருப்பவர்களுக்கு சிறிது தொழில் பிரயாணங்கள் இருக்கக்கூடும். அலைச்சல், பயணங்கள் இருந்தாலும் அதற்கேற்ற பயன்களும் உண்டு.
கன்னி
உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில், குரு பகவானும் சனி பகவானும் பிரவேசிக்கிறார்கள். ஆகையால் இந்த அமைப்பு, கணவன் மனைவி உறவில் சற்று நெருக்கத்தை ஏற்படுத்தும்.
மேலும் சிறிது லாபங்களை எதிர்பார்க்கலாம். சிலருக்கு புத்திர பாக்கியம் சிறிது தாமதம் ஆகலாம்.நண்பர்களிடமோ அல்லது பிறரிடம் வீண் வாக்குவாதம் செய்து பகையை சம்பாதித்துக் கொண்ட இவர்கள், தற்போது பகை நீங்கி, அவர்கள் மூலம் சிறு ஆதாயமும் எதிர்பார்க்கலாம்.
இருப்பினும் இடம், பொருள் ஏவல் பார்த்து பேசுவது அல்லது வாக்களிப்பது இவர்களுக்கு இப்போது பயனளிக்கும்.