
விகாரி தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14ஆம் தேதி கடக ராசி ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறக்கிறது.
திருக்கணிதப்பஞ்சாங்கப்படி தமிழ் புத்தாண்டு தினத்தன்று கடக லக்னம் லக்னத்தில் சந்திரன், மேஷத்தில் சூரியன், ரிஷபத்தில் செவ்வாய் மிதுனத்தில் ராகு தனுசு ராசியில் குரு, சனி, கேது கும்ப ராசியில் சுக்கிரன், மீனம் ராசியில் புதன் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது.
விகாரி ஆண்டில் திருக்கணிதப்பஞ்சாங்கப்படி ஐப்பசி 18ஆம் தேதி நவம்பர் 4ஆம் நாள் குருப்பெயர்ச்சி நிகழ்கிறது. குருபகவான் விருச்சிகம் ராசியில் இருந்து தனுசு ராசிக்கு செல்கிறார்.
வாக்கியப்பஞ்சாங்கப்படி குரு பகவான் அக்டோபர் 28ஆம் தேதி தனுசு ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு செல்கிறார்.
திருக்கணிதப்பஞ்சாங்கப்படி சனிப்பெயர்ச்சி ஜனவரி 24, 2020ஆம் ஆண்டில் நிகழ்கிறது. வாக்கியப்பஞ்சாங்கப்படி மார்ச் 27,2020ஆம் ஆண்டு வெள்ளிக்கிழமை நிகழ்கிறது.
கிரகங்களின் இடப்பெயர்ச்சியை பொறுத்து ரிஷப ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி என்று பார்க்கலாம்.
(கார்த்திகை 2,3,4 பாதங்கள், ரோகிணி, மிருகசீரிஷம் 1,2 பாதங்கள் வரை)
ரிஷப ராசி நேயர்களே,
விகாரி வருடம் பிறக்கும் நட்சத்திரம் ஆயில்யம் ஆகும். ஆயில்யத்திற்குரிய கிரகமான புதன் உங்கள் ராசிக்கு தன பஞ்சமாதிபதியாவார்.
எனவே இந்தப் புத்தாண்டை பணத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஆண்டாகக் கருதலாம். அதுமட்டுமல்ல சகாய ஸ்தானத்தில் கடக லக்னம், கடக ராசியில் ஆண்டின் தொடக்க நாள் அமைகின்றது.
எனவே எதை எதை எல்லாம் சென்ற ஆண்டில் எதிர்பார்த்துக் காத்திருந்தீர்களோ, அவைஅனைத்தும் ஆண்டின் தொடக்கத்தில் வைகாசிக்கு மேல் ஒவ்வொன்றாக நடைபெற்று உள்ளத்தை மகிழ்விக்கப் போகின்றது.
வருடத்தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு 2-ல் ராகுவும், 8-ல் கேதுவும் சஞ்சரிக்கின்றார்கள். மேலும் 8-ம் இடத்தில் குரு, சனி ஆகிய கிரகங்களும் இருக்கின்றன.
அஷ்டம ஸ்தானம் வலுவாக இருப்பதால் நிறைய விரயங்கள் ஏற்படுமோ என்று நீங்கள் கவலைப்பட வேண்டாம். 2-ல் ராகு இருப்பதால் திரண்ட செல்வம் வரும்.
அந்த செல்வத்தை முழுமையாகச் செலவிடும் விதத்தில் பல வாய்ப்புகள் உங்களுக்கு வரும்.
பழைய நகைகளைக் கொடுத்துவிட்டுப் புதிய நகைகள் வாங்குதல், பெண் குழந்தைகளின் கல்யாணச் சீர்வரிசைப் பொருட்களை வாங்க முன்வருதல் போன்றவற்றில் கவனத்தைச் செலுத்தலாம்.
சென்ற ஆண்டில் வீடு கட்டும் முயற்சி பாதியிலேயே தடைபட்டிருக்கலாம்.
அந்தத் தடைகள் இப்பொழுது நிவர்த்தியாகி கட்டிடப் பணியைத் தொடரும் வாய்ப்புக் கிட்டும்.
ஒருசிலர் வீட்டை விரிவுசெய்யலாம். வயல்கள், தோட்டம் வாங்கும் யோகம் கூட ஒருசிலருக்கு உருவாகலாம்.
தங்கம், வெள்ளி போன்றவற்றில் முதலீடுகள் செய்யும் யோகமும் உண்டு.
கூட்டு முயற்சியில் இனி மாறுதல் ஏற்படலாம். அஷ்டமத்துச் சனியால் நட்பு திடீர்,திடீரென பகையாக மாறும் சூழ்நிலை உருவாகலாம்.
ஆனால் சகாய ஸ்தானம் பலம்பெற்று இருப்பதால் விலகிச் சென்றவர்கள் மீண்டும் வந்திணைந்து உங்களுக்கு உறு துணைபுரிவர்.
பெற்றோர்களின் உடல்நிலையில் மட்டும் மிகுந்த கவனம் தேவை.
ராகு-கேதுக்கள் 2, 8 ஆகிய இடங்களில் இருக்கும் பொழுது ஏற்றமும், இறக்கமும் வந்துகொண்டேயிருக்கும்.
தனுசு குருவின் சஞ்சாரம்
(14.4.2019 முதல் 17.5.2019 வரையிலும், மீண்டும் 28.10.2019 முதல் 13.4.2020 வரையிலும்)
இக்காலத்தில் குருவினுடைய பார்வை உங்கள் ராசிக்கு 2, 4, 12 ஆகிய மூன்று இடங்களிலும் பதிகின்றது.
நவக்கிரகங்களில் சுபகிரகமாக கருதப்படுவது குரு. அப்படிப்பட்ட குரு வாக்கு, தனம், குடும்பம் என்பதைப் பற்றி எடுத்துரைக்கும் 2-ம் இடத்தைப் பார்ப்பதால் வளர்ச்சியில் ஏற்பட்ட தளர்ச்சி அகலும். வருமானம் இரு மடங்காக உயரும். குடும்ப ஒற்றுமை பலப்படும்.
குருவின் பார்வை 4-ம் இடத்தில் பதிவதால் தாய் வழி ஆதரவு திருப்தியாக இருக்கும். சுகங்களும், சந்தோஷங்களும் வந்து சேரும். பயணங்கள் பலன் தருவதாக அமையும்.
வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுபவர்களுக்கு இப்பொழுது புதிய வாகனம் வாங்கும் வாய்ப்புகள் கைகூடி வரும்.
உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் அன்பிற்கு பாத்திரமாகி அவர்கள் மூலம் சலுகை கிடைக்கும்.
படிப்பைத் தொடர விரும்புபவர் களுக்கு குருவின் பார்வை பலத்தால் கல்வி ஸ்தானம் புனிதமடைவதால் நல்ல மதிப்பெண் கிடைக்கும்.
மேற் படிப்பிற்கான இடம் எளிதில் கிடைக்கும். வெளிநாடு சென்று படிக்க விரும்புபவர்களுக்கு வௌிநாட்டு யோகமும் கைகூடும். ஆன்மிகப் பயணங்கள் அதிகரிக்கும்.
வங்கியில் உள்ள சேமிப்புகள் கரைந்து விடுகின்றதே என்று கவலைப்பட்டவர்களுக்கு கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டப் புதிய வாய்ப்பு கள் கைகூடி வரும். நிலபுலன்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
கருப்பு நிறப் பயிர்களும், கரும்புப் பயிர்களும் அமோக விளைச்சலைக் கொடுக்கும். இழந்த சொத்துக்களை மீண்டும் வாங்கும் விதத்தில் நல்ல தகவல் கிடைக்கும்.
குருவின் 5-ம் பார்வை 12-ம் இடத்தில் பதிவதால் செலவிற்கேற்ற வரவு வந்து கொண்டே இருக்கும்.
கையில் பணம் வைத்துக் கொண்டு எந்த ஒரு காரியத்தையும் செய்ய வேண்டும் என்பது இல்லை.
காரியத்தைத் தொடங்கி விட்டால் காசு, பணப்புழக்கம் தானாகவே வந்து சேரும்.
கல்யாண மண்டபங்கள் கட்டுவது, விடுதிகளை கட்டுவது போன்றவற்றில் ஒருசிலர் ஆர்வம் காட்டுவர். மூதாதையர்களின் சொத்துக்களில் முறையான பங்கீடுகள் கிடைக்கும். பகைவர்களைப் பற்றிய பயம் அகலும்.
பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் வந்து அமர்வர். வரவேண்டிய சம்பளப்பாக்கிகள் தானாக வந்து சேரும். இடமாற்றம், இலாகா மாற்றம் போன்றவற்றை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு சம்பள உயர்வோடு மாற்றம் வரலாம்.
விருச்சிக குருவின் சஞ்சாரம்
(18.5.2019 முதல் 28.10.2019 வரை)
இக்காலத்தில் குரு பகவான் வக்ர இயக்கத்தில் சஞ்சரிக்கின்றார். குறிப்பாக 7.8.2019 வரை வக்ர இயக்கத்திலும், பிறகு வக்ர நிவர்த்தியாகி விருச்சிகத்திற்குள்ளேயே உலா வருகின்றார்.
இக்காலத்தில் குருவின் பார்வை 1, 3, 11 ஆகிய இடங்களில் பதிவாகின்றது.
எனவே தேக நலன் செயல்பாடுகள், கவுரவம், அந்தஸ்து, வெற்றிச்செய்திகள், மகிழ்ச்சியான மனோநிலை, சகோதர வர்க்கத்தினர் உதவி ஒத்துழைப்புகள், நீடித்த வழக்குகள், பணிபுரியுமிடத்தில் வரும் முன்னேற்றம், உயர்ந்த மனிதர்களின் உதவி, கவுரவப் பதவிகள், பணப்புழக்கம், தொழிலில் லாபம் ஆகியவற்றில் எல்லாம் குருவின் பார்வை பலம் கூடுதலாகக் கிடைத்து நன்மை காணப்போகிறீர்கள்.
ஜென்ம ராசியைக் குரு பார்க்கும் பொழுது சிரமங்களிலிருந்து விடுதலை கிடைக்கும். தித்திக்கும் செய்தி கள் நாள்தோறும் வந்த வண்ணமாகவே இருக்கும். உடல் ஆரோக்கியம் சீராகி உற்சாகத்தோடு பணிபுரிய முன்வருவீர்கள்.
அரசு உத்தியோகத்திற்காக முயற்சி செய்தவர்களுக்கு அது கைகூடும். தான் மட்டும் வேலைக்குப் போவது அல்லாமல் தன் வாழ்ககைத் துணைக்கான வேலை, தன் வாரிசுகளுக்கான வேலை போன்றவற்றில் ஆர்வம் காட்டுபவர்களுக்கு அது கைகூடும்.
முன்னேற்றத்தைக் குறிக்கும் 3-ம் இடத்தையும், லாப ஸ்தானத்தைக் குறிக்கும் 11-ம் இடத்தையும் குரு பார்ப்பதால் சென்ற ஆண்டைக்காட்டிலும் இந்த ஆண்டு சிறப்பான ஆண்டாகவே இருக்கும். கருத்து வேறுபாட்டின் காரணமாக விலகிச்சென்ற உடன்பிறப்புகள் விரும்பி வந்திணைவர்.
அதுமட்டுமல்லாமல் பூர்வீக சொத்து சம்பந்தமாக ஏற்பட்ட பஞ்சாயத்துக்கள் இதுவரை இருந்த சிக்கல்கள் தீரும். நெட்டையோ, குட்டையோ நமக்கு வாய்த்தது அவ்வளவுதான் என்ற மனநிலையோடு பாகப்பிரி வினைகளை முடித்துக்கொள்வீர்கள். லாப ஸ்தானம் பலம்பெறுவதால் திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும்.
சனியின் சஞ்சார நிலைஆண்டு முழுவதும் சனி பகவான் அஷ்டமத்தில் தான் சஞ்சரிக்கின்றார். இடையில் 8.5.2019 முதல் 3.9.2019 வரை தனுசு ராசியிலேயே வக்ரம் பெறுகின்றார்.
அஷ்டமத்தில் சஞ்சரிக்கும் சனியின் பார்வை உங்கள் ராசிக்கு 2, 5, 10 ஆகிய இடங்களில் பதிகின்றது. எனவே நினைக்க இயலாத ராஜ யோகம் வரலாம். நிகழ்காலத் தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுத்து மகிழ்வீர்கள்.
வேலைக்கு முயற்சி செய்பவர் களுக்கு வேலை, மண மாலை கிடைக்கவில்லையே என்று ஆதங்கப்பட்டவர்களுக்கு மணமாலை கிடைக்கும் வாய்ப்பும் உண்டு.
தொழில் போட்டிகள் அகலும். வருமானம் எப்பொழுதும் போல சீராகவே இருக்கும். சனியின் வக்ர காலத்தில் விரயங்கள் கொஞ்சம் கூடுதலாகவே இருக்கும். பழகுபவர்கள் பகையாகி போகாமலிருக்க அனுசரித்துச் செல்வது நல்லது.
ராகு-கேதுக்களின் சஞ்சாரம்
உங்கள் ராசிக்கு 2-ல் ராகுவும், 8-ல் கேதுவும் சஞ்சரிக்கின்றார்கள். ‘கரும்பாம்பு 2-ல் வந்தால் கனதனம் நிறைய சேரும்’ என்பார்கள். எனவே பணப்பற்றாக்குறை அகலும்.
வருங்காலம் வசந்தகாலமாக வழிவகுத்துக் கொள்வீர்கள். கேதுவின் பலத்தால் வீடு மாற்றங்களும், இடமாற்றங்களும் ஒருசிலருக்கு ஏற்படலாம். பயணங்களை யோசித்து ஏற்றுக்கொள்ளுங்கள்.
ஆரோக்கியம் சீராக மாற்று மருத்துவம் கைகொடுக்கும். நாகசாந்திப் பரிகாரம் செய்வதன் மூலம் நல்ல பலன்கள் உங்களுக்கு வந்துசேரும்.
சனி-செவ்வாய் பார்வைக்காலம்
(14.4.2019 முதல் 23.6.2019 வரை)
இக்காலத்தில் எதிரிகளின் பலம் கொஞ்சம் கூடும். மற்றவர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகளால் மனக்கவலை ஏற்படும். மன பயம் அகல மந்தன் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.
விரயங்கள் அதிகரிக்கும். வாங்கிய சொத்துக்களை விற்றுக் கடனை அடைக்கலாமா என்று நினைக்கத்தோன்றும். பதற்றத்தையும், படபடப்பையும் நீக்கி நிதானத்துடன் செயல்படுவதன் மூலமே நீங்கள் உங்கள் லட்சியங்களை நிறைவேற்றிக் கொள்ள முடியும்.
செவ்வாய் விரதமும், அங்காரக வழிபாடும் தைரியத்தைக் கொடுக்கும்.
பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்
ரிஷப ராசியில் பிறந்த பெண்களுக்கு ஆண்டு முழுவதும் அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் இருந்தாலும், குடும்ப ஸ்தானத்தை குரு பார்ப்பதால் கவலைப்பட வேண்டியதில்லை.
பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். ஒருவரையொருவர் புரிந்து கொண்டு செயல்படுவீர்கள்.
பக்கத்து வீட்டாரின் பகை மாறும். வாரிசுகளின் வளர்ச்சிக்காக நீங்கள் செய்த முயற்சிகள் அனைத்தும் கைகூடும். தாயின் ஆதரவு தக்க விதத்தில் கிடைக்கும்.
சகோதரர்களில் ஒருசிலர் உங்களோடு ஒத்துப்போவது அரிது. ஆடை, ஆபரணம் வாங்கும் அமைப்பும், அயல்நாட்டு யோகமும் உண்டு. விருச்சிகத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது விவாகப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி கைகூடும்.
அரசு வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அழைப்புகள் வரலாம். பணி புரியும் பெண்களுக்கு இடமாற்றங்கள், ஊர்மாற்றங்கள் வருவது உறுதியாகும்.
குலதெய்வ வழிபாடும், சுயஜாதகத்தில் திசாபுத்திக்கேற்ற தெய்வ வழிபாடும் திருப்தியான வாழ்க்கையை அமைத்துக்கொடுக்கும்.
வருடம் முழுவதும் வசந்தகாலமாக வழிபாடு
வடக்குப்பார்த்த விநாயகரையும், வாலில் மணிகட்டிய ஆஞ்சநேயரையும் வழிபட்டு வாருங்கள். அனுமன் கவசம் பாடி வழிபட்டால் பணியில் ஏற்பட்ட தொய்வும் அகலும். பணவரவும் திருப்தி தரும்.