மாசி மாதம் ராசிபலன்கள்: 12 ராசிகளில் யாருக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு எச்சரிக்கை?

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் :

12 ராசிகளுக்குமான மாசி மாதம் ராசிபலன்கள்13.02.2019 முதல் 14.03.2019 வரை

மேஷம்
மற்றவரின் மன ஓட்டத்தை நாடி பிடித்துப் பார்ப்பதில் வல்லவர்களான நீங்கள் எங்கும், எதிலும் அழகுணர்வையே விரும்புவீர்கள். புதனும், உங்களின் பூர்வ புண்யாதிபதியான சூரியனும் லாப வீட்டில் இந்த மாதம் முழுக்க நிற்பதால் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளுமளவிற்கு பணம் வரும். சொத்துப் பிரச்னைகளை சுமுகமாக முடிப்பீர்கள். சொந்த பந்தங்கள் தேடி வந்து பேசுவார்கள்.

அரசு விஷயங்களும் உடனே முடியும். எதிர்பார்த்த வங்கிக் கடனும் கிட்டும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்த கவலைகள் நீங்கும். மகனுக்கு நல்ல வேலை கிடைக்கும். அண்டை மாநிலம், வெளிநாடு என எங்கு வாய்ப்பு வந்தாலும் அனுப்பி வையுங்கள். சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் வாகன வசதி பெருகும். உங்கள் ரசனைக்கேற்ப வீடு, மனை அமையும்.

மனதிற்கு இதமான செய்திகள் வரும். வெளிவட்டாரத்தொடர்பு அதிகரிக்கும். 8ல் நிற்கும் குருவால் சிலரின் விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள்.

வீண் சந்தேகத்தை விலக்கிக் கொள்ளப்பாருங்கள். அவ்வப்போது நன்றி மறந்தவர்களை நினைத்து வருந்துவீர்கள். ராகு 3ம் வீட்டிற்குள் நுழைந்திருப்பதால் தைரியமாக பெரிய முடிவுகள் எடுப்பீர்கள். தெய்வப் பிரார்த்தனைகளையெல்லாம் நிறைவேற்றுவீர்கள்.

எளிய உடற்பயிற்சி மேற்கொண்டு ஆரோக்யத்தில் அக்கறை காட்டுவீர்கள். ஆனால் 9ல் நுழைந்திருக்கும் கேதுவால் தந்தைக்கு வேலைச்சுமை, சோர்வு, களைப்பு வந்து போகும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். ராசிநாதன் ஆட்சி பெற்றிருப்பதால் சகோதரங்களால் பயனடைவீர்கள். என்றாலும் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். அரசியல்வாதிகளே! கட்சி தலைமையால் பாராட்டப்படுவீர்கள்.

கன்னிப் பெண்களே!
எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். பெற்றோர் ஆதரிப்பார்கள். மாணவர்களே! படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தப் பாருங்கள். விடைகளை எழுதிப்பாருங்கள். வியாபாரத்தில் விளம்பர யுக்திகளைப் பயன்படுத்துவீர்கள். மறைமுக போட்டிகளை சமாளிப்பீர்கள்.

வேலையாட்களிடம் தொழில் ரகசியங்களை சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். கடையை வேறு இடத்திற்கு மாற்றம் செய்வீர்கள். வாடிக்கையாளர்கள், பங்குதாரர்களை அனுசரித்துப் போங்கள். நகை, ஜவுளி, ஆட்டோ மொபைல் உதிரிபாகங்கள் முன்னேற்றம் தரும். உத்யோகத்தில் மேலதிகாரியிடம் நற்பெயர் எடுக்க கொஞ்சம் போராட வேண்டி வரும்.

உங்களை எப்பொழுதும் எதிரியாக நினைத்த சக ஊழியர்கள் இனி வலிய வந்து நட்புறவாடுவார்கள்.

கலைத்துறையினர்களே!
எதிர்பார்த்த புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

விவசாயிகளே!
வயலில் எலித்தொல்லை, பூச்சித் தொல்லை குறையும். தண்ணீர் வரத்து அதிகரிக்கும். தன் பலம் பலவீனம் உணரும் மாதமிது.

ராசியான தேதிகள்:
பிப்ரவரி 14, 15, 16, 17, 21, 22, 23, 24 மற்றும் மார்ச் 4, 5, 6, 13, 14.

சந்திராஷ்டம தினங்கள்:
பிப்ரவரி 25ம் தேதி இரவு 9.35 மணி முதல் 26, 27ம் தேதி வரை.

ரிஷபம்
விருப்பு, வெறுப்பின்றி நடுநிலையோடு செயல்படும் நீங்கள் மனதில் பட்டதை பளிச்சென்று பேசுபவர்கள். அடுத்தடுத்து வேலைகள் வந்தாலும் அசராமல் முடிப்பவர்கள். இந்த மாதம் முழுக்க சூரியனும், புதனும் சாதகமாக இருப்பதால் புது வேலை கிடைக்கும். வருமானம் உயரும்.

அதிகாரப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வங்கிக் கடனுதவியுடன் வீடு, மனை வாங்குவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. உறவினர்கள் உங்களைப் பற்றிப் பெருமையாகப் பேசுவார்கள். ஆனால் 12ல் செவ்வாய் தொடர்வதால் நிலம், வீடு வாங்குவது, விற்பதில் தாய்பத்திரத்தை சரி பார்த்து வாங்குங்கள்.

சகோதரங்களால் பிரச்னைகள் வரக்கூடும். ராசிநாதன் சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் வரவேண்டிய பணம் வந்துசேரும். வெளி வட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். கணவன், மனைவிக்குள் இருந்து வந்த கசப்புணர்வுகள் நீங்கும்.

ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசி சில முக்கிய முடிவுகளையெல்லாம் எடுப்பீர்கள். ஆனால் சனி, ராகு, கேது ஆகிய மூன்று கிரகங்களும் சரியில்லாததால் பேச்சில் நிதானம் தேவை. செலவுகள் அதிகரிக்கும். ஆன்மிக காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

நீண்ட நாளாக போக நினைத்த புண்ணியஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். நண்பர்களில் சிலர் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். யாருக்கும் ஜாமீன் கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். ஆனால் குருபகவான் சாதகமாக செல்வதால் புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள்.

பழைய பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். வழக்குகளை சுமுகமாகப் பேசி முடிக்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். உங்களுக்காக பிரபலங்கள் எல்லா வகையிலும் உதவுவதற்கு முன் வருவார்கள். கணவன், மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும்.

அரசியல்வாதிகளே!
எதிர்கட்சிக்காரர்கள் உதவுவார்கள்.

கன்னிப் பெண்களே!
கல்யாணப் பேச்சு வார்த்தை சுமுகமாக முடியும். புது வேலை கிடைக்கும். மாணவர்களே! நினைவாற்றல் அதிகரிக்கும். விளையாட்டில் பதக்கம் வெல்வீர்கள். வியாபாரத்தில் மாறுபட்ட அணுகுமுறையால் லாபம் ஈட்டுவீர்கள். வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள்.

எதிர்பார்த்த ஒப்பந்தம்கையெழுத்தாகும். கம்ப்யூட்டர், கட்டிடம் வகைகளால் ஆதாயம் உண்டு. வாடிக்கையாளர்கள் உங்கள் மனங்கோணாமல் நடத்து கொள்வார்கள்.

பங்குதாரர்கள் ஏதேனும் குறை கூறுவார்கள். உத்யோகத்தில் தொல்லை தந்த மேலதிகாரி உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்.

சக ஊழியர்களுக்காக உயரதிகாரியிடம் பரிந்து பேசுவீர்கள்.

கலைத்துறையினர்களே!
உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும்.

விவசாயிகளே!
விளைச்சலை இரட்டிப்பாக்க நவீனயுக்திகளை கையாளுவீர்கள். விட்டதைப் பிடித்து வெற்றி பெறும் மாதமிது.

ராசியான தேதிகள்:
பிப்ரவரி 16, 17, 18, 19, 24, 27 மற்றும் மார்ச் 6, 8, 9, 10, 11.

சந்திராஷ்டம தினங்கள்:
பிப்ரவரி 28,மற்றும் மார்ச் 1, 2ம் தேதி பிற்பகல் 3மணி வரை.

மிதுனம்
இடம் பொருள் ஏவல் தெரிந்து, இனிமையாகப் பேசி காரியம் சாதிப்பதில் வல்லவர்களான நீங்கள் எதிரியானாலும் உதவும் குணமுடையவர்கள். ராசிநாதன் புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் மாறுபட்ட அணுகுமுறையால் வெற்றி அடைவீர்கள்.

வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். கோபம் தணியும். சொந்த, பந்தங்களின் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். புது நட்பு மலரும். வெளி வட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பயணங்களால் திருப்பம் உண்டாகும். ஆனால் சூரியன் 9ல் நுழைந்திருப்பதால் தந்தைக்கு கொஞ்சம் முடியாமல் போகும்.

செலவுகளும் கட்டுக்கடங்காமல் போகும். செவ்வாய் லாப வீட்டில் வலுவாக இருப்பதால் உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். பழைய சொத்தை விற்று புது வீடு வாங்குவீர்கள். வழக்கு சாதகமாகும். சுக்கிரன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் ஓரளவு பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் ஏற்பாடாகும்.

சொந்தபந்தங்களின் வருகை அதிகரிக்கும். மனைவிவழியில் உதவியுண்டு. பிள்ளைகள் உங்கள் மனங்கோணாமல் நடந்து கொள்வர். பழுதான மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள். ஆனால் ராகு ராசிக்குள் நுழைந்திருப்பதால் சட்டத்திற்கு புறம்பான வகையில் யாருக்கும் உதவ வேண்டாம்.

தோல்விமனப்பான்மை தலைதூக்கும். கேதுவும், சனியும் ராசிக்கு 7ல் அமர்ந்திருப்பதால் மனைவியுடன் கருத்து மோதல்கள், கர்பப்பையில் வலி வந்து போகும். குரு 6ம் வீட்டிலேயே நிற்பதால் மனஉளைச்சலும், தாழ்வுமனப்பான்மையும், எதிர்காலம் பற்றிய ஒரு அச்சமும் வந்து விலகும். அரசியல்வாதிகளே! ஆதாரமில்லாமல் எதிர்கட்சிக்காரர்களை விமர்சிக்க வேண்டாம்.

கன்னிப் பெண்களே! பெற்றோருடன் கலந்தாலோசித்து வருங்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மாணவர்களே! வகுப்பறையில் ஆசிரியர் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள், வேலையாட்கள் மதிப்பார்கள். ஆனால் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள்.

கல்வி நிறுவனங்கள், புரோக்கரேஜ் வகைகளால் ஆதாயமடைவீர்கள். உத்யோகத்தில் கடினமான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சில முக்கிய பொறுப்புகள் உங்கள் கைக்கு மாறும். அலுவலகத்தை விரிவு படுத்துவது குறித்து யோசிப்பீர்கள்.

கலைத்துறையினர்களே!
எண்ணங்கள் பூர்த்தியாகும். மூத்த கலைஞர்களின் அறிவுரையை ஏற்பீர்கள்.

விவசாயிகளே!
மகசூல் அதிகரிப்பதால் சந்தோஷம் நிலைக்கும். வட்டிக்கு வாங்கிய கடனை இனி பைசல் செய்வீர்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும் மாதமிது.

ராசியான தேதிகள்:
பிப்ரவரி 18,19, 20, 21, 22, 26, 27, 28, 29 மற்றும் மார்ச் 8, 9, 10, 11, 13.

சந்திராஷ்டம தினங்கள்:
மார்ச் 2ம் தேதி பிற்பகல் 3மணி முதல் 3, 4ம் தேதி வரை.

கடகம்
சதாசர்வ காலமும் உழைத்துக் கொண்டிருப்பவர்கள் நீங்கள், போராட்டங்களை ரசித்து வாழக்கூடிய மனதுடையவர்கள். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் பழைய நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். அறிஞர்களின் நட்பு கிடைக்கும். இளைய சகோதரருடன் இருந்த மனவருத்தம் நீங்கும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

கடந்த ஒரு மாதமாக உங்கள் ராசியை பார்த்துக் கொண்டிருந்த சூரியன் இப்போது 8ல் மறைந்ததால் கோபம் குறையும். பிரிந்தவர்கள் ஒன்று சேர்வீர்கள். இழுபறியான வேலைகள் முடியும்.

அரசால் ஆதாயம் உண்டு. மனைவியின் உடல் ஆரோக்யம் சீராகும். தந்தை வழியில்ஆதரவு பெருகும். செவ்வாய் 10ல் இருப்பதால் இழுபறி நிலை மாறும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக சில பணிகளை செய்வார்கள். சொத்துப் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

24ம் தேதி வரை சுக்கிரன் 6ல் மறைந்திருப்பதால் மனைவியுடன் வாக்குவாதம், சளித் தொந்தரவு, கழுத்து வலி வந்து நீங்கும். ஆடம்பரச் செலவுகளை குறைக்கப் பாருங்கள். ஆனால் 25ம் தேதி முதல் சுக்கிரன் 7ல் அமர்வதால் எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். மனைவியுடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். ராசிக்கு 12ல் ராகு நுழைந்திருப்பதால் சில நேரங்களில் தூக்கமில்லாமல் போகும். திடீர் பயணங்கள் உண்டு.

கேதுவும், சனியும் 6ம் வீட்டில் நிற்பதால் மறைமுக எதிரிகளால் ஆதாயம் உண்டு. மகான்களின் ஆசி கிட்டும். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும்.

அரசியல்வாதிகளே!
பொதுக்கூட்டம், போராட்டங்களில் முன்னிலை வகிப்பீர்கள்.

கன்னிப்பெண்களே!
தடைப்பட்ட உயர்கல்வியை தொடர்வீர்கள். பெற்றோரின் ஆலோசனையின்றி எந்த முடிவும் எடுக்க வேண்டாம். மாணவர்களே! அதிகாலையில் எழுந்து படிப்பதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.

வகுப்பறையில் வீண் அரட்டை வேண்டாம். குரு சாதகமாக இருப்பதால் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். புதுத் திட்டங்கள் தீட்டுவீர்கள். வெளிநாடு, அண்டை மாநிலத்தில் இருப்பவர்கள் உங்களுக்கு உதவி செய்ய முன்வருவார்கள். அனுபவமிக்க வேலையாட்கள் அமைவார்கள். வர வேண்டிய பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப் பாருங்கள்.

ஆனால் சூரியனால் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைவார்கள். ஏஜென்சி, மருந்து, உர வகைகளால் லாபமடைவீர்கள். பங்குதாரர்களிடம் கவனமாகப் பழகுங்கள். உத்யோகத்தில் தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கப்பாருங்கள். மேலதிகாரியைப் பற்றிய விமர்சனங்களைத் தவிர்ப்பது நல்லது. சக ஊழியர்கள் உதவுவார்கள்.

கலைத்துறையினர்களே!
கிடைக்கிற வாய்ப்பு சின்னதாக, சாதாரணமானதாக இருந்தாலும் பயன்படுத்திக் கொள்வது நல்லது.

விவசாயிகளே!
வரப்புச் சண்டை, வாய்க் கால் தகராறு என்று நேரத்தை வீணடிக்காதீர்கள். விளைச்சலில் கவனம் செலுத்துங்கள். ஆரோக்யத்தில் அக்கறை காட்ட வேண்டிய மாதமிது.

ராசியான தேதிகள்:
பிப்ரவரி 13,14,20,21,23,24,25,28 மற்றும் மார்ச் 1,2,3,10,11,12,13.

சந்திராஷ்டம தினங்கள்:
மார்ச் 5, 6, 7ம் தேதி பிற்பகல் 2மணி வரை.

சிம்மம்
நிறை குறைகளை அலசி ஆராய்ந்து யாரையும் துல்லியமாக கணிக்கும் நீங்கள் மற்றவர்களின் உணர்வுக்கு மதிப்புக் கொடுப்பவர்கள். புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் சமயோஜித புத்தியால் சாதிப்பீர்கள். பணத்தட்டுப்பாடு குறையும். உறவினர்கள், நண்பர்கள் வீடு தேடி வருவார்கள். வெளியூர் பயணங்களால் மனஅமைதி கிடைக்கும். சொந்த ஊரில் மதிக்கப்படுவீர்கள்.

சூரியன் உங்கள் ராசியைப் பார்த்தால் அவ்வப்போது தூக்கம் இல்லாமல் போகும். கடந்த காலத்தில் பட்ட அவமானங்கள், ஏமாற்றங்கள், இழப்புகளை எல்லாம் நினைத்து அவ்வப்போது பெருமூச்சு விடுவீர்கள். செவ்வாய் 9ம் வீட்டில் நிற்பதால் சொத்து வாங்குவீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். 24ம் தேதி வரை சுக்கிரன் 5ல் நிற்பதால் பிள்ளைகளால் நிம்மதி அடைவீர்கள்.

சிலருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும் ஆனால் 25ம் தேதி முதல் சுக்கிரன் 6ல் மறைவதால் கணவன், மனைவிக்குள் சண்டை, சச்சரவு வந்து நீங்கும். வாகன விபத்துகள் ஏற்படக்கூடும். எவ்வளவு பணம் வந்தாலும் சேமிக்க முடியாதபடி செலவுகள் துரத்தும். கல்யாண விஷயங்கள் தள்ளிப் போய் முடியும்.

புதியவர்கள் அறிமுகமாவார்கள். கேதுவும், சனியும் 5ல் அமர்ந்திருப்பதால் புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். ஆனால் லாப வீட்டில் ராகு நிற்பதால் எதையும் தாங்கும் மனவலிமை கிட்டும். அக்கம், பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வெளிவட்டாரத்தில் கௌரவப் பதவிகள் தேடி வரும். குரு 4ல் நீடிப்பதால் எடுத்த வேலைகளை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். அரசியல்வாதிகளே! கட்சி மேல்மட்டத்தை பகைத்துக் கொள்ளாதீர்கள்.

கன்னிப் பெண்களே!
ஆடை அணிகலன்கள் சேரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். மாணவர்களே! மதிப்பெண் உயரும். பெற்றோரின் ஒத்துழைப்புடன் விரும்பிய கோர்ஸில் சேருவீர்கள். வியாபாரத்தில் தேங்கிக் கிடந்த சரக்குகளை சாமார்த்தியமாக விற்றுத் தீர்ப்பீர்கள். பற்று வரவு உயரும்.

தொல்லை தந்த வேலையாட்களை மாற்றுவீர்கள். ஏற்றுமதி, இறக்குமதி, பிளாஸ்டிக் வகைகளால் ஆதாயம் பெருகும். பங்குதாரர்களால் அவ்வப்போது குடைச்சல் இருந்தாலும் பிரச்னைகள் பெரிதாக இருக்காது. உத்யோகத்தில் உங்களைத் தரக்குறைவாக நடத்திய அதிகாரிகளின் மனம் மாறும்.

சக ஊழியர்கள் மத்தியில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். வர வேண்டிய சம்பள பாக்கி கைக்கு வரும்.

கலைத்துறையினர்களே!
பெரிய நிறுவனங்களின் அழைப்பு உங்களை தேடி வரும்.

விவசாயிகளே!
வீட்டில் நல்லது நடக்கும். காய்கறி, பழ வகைகளால் லாபமடைவீர்கள். தொட்டதெல்லாம் துலங்கி வெற்றி பெறும் மாதமிது.

ராசியான தேதிகள்:
பிப்ரவரி 13,14, 15, 16, 22, 23, 24, 25 மற்றும் மார்ச் 3, 4, 5, 6, 13, 14.

சந்திராஷ்டம தினங்கள்:
மார்ச் 7ம் தேதி பிற்பகல் 2மணி முதல் 8, 9ம் தேதி வரை.

கன்னி
மனசாட்சி சொல்வதை மறுக்காமல் செய்யும் குணமுடைய நீங்கள், குற்றம் குறைகள் இருந்தாலும் சுற்றத்தாரை அனுசரித்து வாழக்கூடியவர்கள். சூரியன் 6ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் எதிர்பார்ப்புகள் எளிதாக முடியும். மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். புது வேலை கிடைக்கும். அதிகாரப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

தாயாரின் உடல் நலம் சீராகும். பூர்வீக சொத்துப் பங்கை கேட்டு வாங்குவீர்கள். திருமணம் கூடி வரும். வெளி வட்டாரத்தில் சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். ஆனால் ராசிநாதன் புதன் வலுவிழந்து காணப்படுவதால் ஓய்வில்லாமல் வேலை பார்க்க வேண்டி வரும்.

கழுத்து, முதுகு வலி வந்து போகும் உங்கள் முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழந்து விடாதீர்கள். உதவி கேட்டு உறவினர்களும், நண்பர்களும் தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவார்கள்.

8ல் நிற்கும் செவ்வாயால் ஏமாற்றங்களும், அடி வயிற்றில் வலியும், மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறும் வந்து போகும். வழக்கில் அவசரம் வேண்டாம். சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் பணவரவுக்கு குறைவிருக்காது. மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும்.

எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிறுவனத்திலேயே வேலை கிடைக்கும். கணவன், மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். கேதுவும், சனியும் 4ல் நிற்பதால் தாயாருக்கு அவர்கள் எதிர்பார்த்த படி அதிகம் உங்களால் உதவமுடியவில்லையே என்ற ஒரு ஆதங்கம் இருக்கும்.

குருபகவான் 3ம் வீட்டில் நிற்பதால் புது முயற்சிகள், புதிய காரியங்களையெல்லாம் போராடிதான் முடிக்க வேண்டி வரும். அரசியல்வாதிகளே! சகாக்கள் மத்தியில் செல்வாக்கு கூடும்.

கன்னிப் பெண்களே!
மனதை அலைபாய விடாமல் ஒருநிலைப்படுத்துங்கள். மாணவர்களே! நினைவாற்றலை அதிகப்படுத்த விடைகளை எழுதிப் பாருங்கள். கீரை வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து லாபத்தை பெருக்குவீர்கள்.

வேலையாட்கள் கொஞ்சம் முரண்டு பிடிக்கத்தான் செய்வார்கள். கொடுக்கல், வாங்கலில் சுமுகமான நிலை காணப்படும். உணவு, கமிஷன், மர வகைகளால் லாபமடைவீர்கள். புது ஏஜென்சிகளை யோசித்து எடுப்பது நல்லது. பங்குதாரர்களிடையே அவ்வப்போது மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். ராகுவும் 10ல் நுழைந்திருப்பதால் உத்யோகத்தில் காலம் நேரம் பார்க்காமல் உழைக்க வேண்டி வரும்.

சக ஊழியர்கள் நல்லவர்களைப் போல் நடத்து உங்களை ஏமாற்றுவார்கள்.

விவசாயிகளே!
உங்கள் கடன் தள்ளுபடியாகும். புதிய சலுகைகள் கிடைக்கும்.

கலைத்துறையினர்களே!
வீண் வதந்திகளிலிருந்து விடுபடுவீர்கள். உங்களின் படைப்புகள் பலராலும் பாராட்டப்படும். ரகசியங்களை காக்க வேண்டிய மாதமிது.

ராசியான தேதிகள்:
பிப்ரவரி 16, 17, 18, 19, 24, 26, 27 மற்றும் மார்ச் 1, 5, 6, 8, 9.

துலாம்
எதையும் ஆற அமர யோசித்து முடிவெடுக்கும் போக்கு உடையவரான நீங்கள் நல்லது கெட்டது தெரிந்து செயல்படுவீர்கள். 3ல் கேதுவும், சனியும் வலுவாக இருப்பதால் புதிய முயற்சிகள் யாவும் பலிதமாகும். மகான்கள், சித்தர்களின் ஆசி கிட்டும். பழைய இனிய அனுபவங்கள் நினைவுக்கு வரும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார்.

எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தையும் தந்து முடிப்பீர்கள். அநாவசிய செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். ஓரளவு சேமித்து புது நகை வாங்கும் அமைப்பு உண்டாகும். 5ம் விட்டிற்குள் நுழைந்திருக்கும் சூரியன் பிள்ளைகளால் அலைச்சலையும், செலவுகளையும் தருவார். தூக்கமில்லாமல் போகும். அடிவயிற்றில் லேசாக வலி வந்து போகும்.

பாக்யாதிபதி புதன் 5ல் நிற்பதால் மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு வேலை கிடைக்கும் செவ்வாய் 7ல் அமர்ந்திருப்பதால் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். முடிவுகள் எடுப்பதில் இருந்த தயக்கம் நீங்கும். சகோதரர் வளைந்து வருவார். இளைய சகோதரிக்கு நல்ல வரன் அமையும்.

வீடு, மனை விற்பது வாங்குவதில் நல்ல தீர்வு கிடைக்கும். ராசிநாதன் சுக்கிரனும், குருவும் சாதகமான வீடுகளில் செல்வதால் சோர்வு, அலட்சியப்போக்கு, தாழ்வு மனப்பான்மை நீங்கும். தடைபட்ட வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும்.

அரசியல்வாதிகளே!
கட்சிக்குள் நடக்கும் கோஷ்டி பூசலில் சிக்கிக் கொள்ளாதீர்கள்.

கன்னிப் பெண்களே!
சாதிக்க வேண்டுமென்ற தன்னம்பிக்கை வரும். மாணவர்களே! உயர்கல்வியில் வெற்றியுண்டு. ஆசிரியர்களின் அன்பை பெறுவீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்வீர்கள். வேலையாட்கள், பங்குதாரர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வாடிக்கையாளர்களை கவர பழைய முறையை கைவிட்டு புதிய முறைகளை கையாளுவீர்கள்.

புது முதலீடுகள் செய்து கடையை விரிவுபடுத்துவீர்கள். புரோக்கரேஜ், எண்டர்பிரைஸ் வகைகளால் ஆதாயம் உண்டு. உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை மேலதிகாரிகள் பாராட்டுவார்கள். சக ஊழியர்களை திருத்துவீர்கள். அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்திலிருந்து வாய்ப்புகள் வரும்.

விவசாயிகளே!
உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். பழுதாகிக் கிடந்த பம்பு செட்டை மாற்றுவீர்கள்.

கலைத்துறையினர்களே!
உங்களின் சம்பளம் உயரும். மூத்த கலைஞர்கள் உதவுவார்கள். முற்பகுதி அலைச்சலை தந்தாலும் பிற்பகுதியில் பெருமை சேர்க்கும் மாதமிது.

ராசியான தேதிகள்:
பிப்ரவரி 17,18,19,20,26,27,28 மற்றும் மார்ச் 1,3,8,9,10,11.

சந்திராஷ்டம தினங்கள்:
பிப்ரவரி 13,14 மற்றும் மார்ச் 12ம் தேதி காலை 7.36 மணி முதல் 13,14ம் தேதி நண்பகல் 12.48மணி வரை.

விருச்சிகம்
தீவிரமாக யோசித்து மிதமாகச் செயல்படுவீர்கள். வாக்கு சாதுர்யத்தால் வாதங்களில் வெல்வீர்கள். பிறர் செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட்டி நல்வழிப் படுத்துவீர்கள். சூரியன் 4ல் நிற்பதால் புது வேலை கிடைக்கும். வி.ஐ.பிகளின் தொடர்பு கிடைக்கும். தன்னம்பிக்கை பிறக்கும். தாய்வழியில் ஆதரவு பெருகும். புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் பழைய நண்பர்கள் ஆதரவாகப் பேசுவார்கள்.

உதவுவார்கள். உறவினர்கள் எதிர்பார்ப்புகளுடன் பேசுவார்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வெளியூர் ப்பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. கடன் பிரச்னைகள் ஒரு பக்கம் விரட்டினாலும் இங்கிதமாகப் பேசி வட்டியைத் தருவீர்கள். ராகு, கேது, சனி பகவான் மூவரும் சாதகமாக இல்லாததால் கை, காலில் அடிபடுதல், மறைமுக எதிர்ப்புகள் வந்துச் செல்லும். சில நேரங்களில் மற்றவர்களுக்காக நியாயம் பேசப் போய் வம்பில் சிக்கிக் கொள்வீர்கள்.

பல் மற்றும் காது வலி வந்து போகும். உங்களுடைய ராசிக்குள்ளேயே குருவும் அமர்ந்திருப்பதால் அவ்வப்போது கோபப்படுவீர்கள். எனக்கு மட்டும் ஏன் இத்தனை சோதனை வருகிறது என்றெல்லாம் சில நேரங்களில் ஆதங்கப்பட்டுக் கொள்வீர்கள். ஆனால் செவ்வாய் 6ல் அமர்ந்திருப்பதால் மனஉறுதி அதிகமாகும். புதிய நண்பர்களின் உதவியால் பல காரியங்களையும் சாதித்துக் காட்டுவீர்கள்.

வெளிவட்டாரத் தொடர்புகள் நன்றாக இருக்கும். சுக்கிரன் சாதகமான வீடுகளில் சென்று கொண்டிருப்பதால் உங்களிடம் இருக்கக் கூடிய குறைகள் கூடாப்பழக்க வழக்கங்கள் நீங்கும். மறதி, சோம்பல் விலகும். சுறுசுறுப்பாவீர்கள். உற்சாகமடைவீர்கள். அரசியல்வாதிகளே! சகாக்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். கன்னிப் பெண்களே! ஆசை வார்த்தைகளை கேட்டு காதல் விவகாரங்களில் சிக்காதீர்கள்.

மாணவர்களே! தேர்வு நேரத்தில் படித்துக் கொள்ளலாம் என்று அலட்சியமாக இருக்க வேண்டாம். வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். வேலையாட்கள், வாடிக்கையாளர்களிடம் கோபப்படாதீர்கள். பெரிய முதலைப் போட்டு மாட்டிக்கொள்ளாமல் சந்தை நிலவரங்களை அறிந்து செயல்படுவது நல்லது. சிலர் அறிவுரை சொல்கிறேன் என்ற பெயரில் தவறான ஆலோசனைகளை வழங்கக்கூடும்.

ஹோட்டல், கணினி உதிரி பாகங்கள், துணி வகைகளால் லாபமடைவீர்கள். பங்குதாரர்களிடம் வளைந்து கொடுத்துப் போங்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரித்துக் கொண்டே போகும். அனாவசியமாக விடுப்புகள் எடுக்க வேண்டாம். அதிகாரிகளுடன் அளவாகப் பழகுங்கள்.

விவசாயிகளே!
வங்கியில் கடனுதவி கிடைக்கும். நிலத்தகராறுப் பிரச்னைகள் வரத்தான் செய்யும். கலைத்துறையினர்களே! வீண் வதந்திகளும், கிசுகிசுக்களும் இருக்கத்தான் செய்யும். மனந்தளராமல் இருங்கள். ஆளுமைத் திறன் அதிகரிக்கும் மாதமிது.

ராசியான தேதிகள்:
பிப்ரவரி 13,14,20,21,22,24,28 மற்றும் மார்ச் 1,3,4,10,11,12,13.

சந்திராஷ்டம தினங்கள்:
பிப்ரவரி 15,16,17ம் தேதி காலை 8.02 மணி வரை மற்றும் மார்ச் 14ம் தேதி நண்பகல் 12.48 மணி முதல்.

தனுசு
எறும்பு போல் அயராது உழைத்து, தேனீ போல் சேமிக்கும் இயல்பு உடைய நீங்கள் எப்போதும் நல்லதே நினைப்பவர்கள். புதன் சாதகமாகச் செல்வதால் மனைவிவழி உறவினர்களுடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும். மனைவிக்கு வேலை கிடைக்கும். கல்யாணம், கிரகப் பிரவேசம் என வீடு களை கட்டும். சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள்.

உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். கடந்த ஒரு மாத காலமாக 2ல் அமர்ந்து உணர்ச்சிவசப்பட்டு பேச வைத்த சூரியன் இப்போது 3ம் வீட்டில் நுழைந்திருப்பதால் அறிவு பூர்வமாக செயல்பட்டு முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

அரசு காரியங்கள் உடனே முடியும். வேலை கிடைக்கும். பல் வலி, கண் வலி சரியாகும். புது வீடு கட்ட ப்ளான் அப்ரூவல் கிடைக்கும். நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும்.

புது பதவிகள் தேடி வரும். கணவன், மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். 5ல் செவ்வாய் நிற்பதால் யோசித்து முடிவெடுங்கள். பிள்ளைகள் இன்னும் கொஞ்சம் பொறுப்பாகவும், சுறுசுறுப்பாகவும் இருந்தால் நன்றாக இருக்குமே என நினைப்பீர்கள். உங்களின் ஆலோசனைகளை அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள்.

தாய்வழி உறவினர்களால் அலைச்சல் இருக்கும். சுக்கிரன் சாதகமான வீடுகளில் பயணிப்பதால் மறைமுக பணம் வரும். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். புது வண்டி வாங்குவீர்கள். ராசிக்கு 7ல் ராகு தொடர்வதால் மனைவியுடன் அவ்வப்போது மோதல்கள், சோர்வு, களைப்பு வந்து நீங்கும்.

ராசிக்குள் நிற்கும் கேதுவும், சனியும் அவ்வப்போது கோபப்பட வைப்பார்கள். அசைவ, கார, வாயு பதார்த்தங்களைத் தவிர்ப்பது நல்லது. குருபகவான் 12ல் மறைந்திருப்பதால் நிம்மதியற்ற போக்கு நிலவும். வெளிமாநிலத்தில், வேற்றுநாட்டிலிருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.

அரசியல்வாதிகளே! உங்களின் பொறுப்புணர்வை மேலிடம் பாராட்டும். கன்னிப் பெண்களே! கெட்ட நண்பர்களிடமிருந்து விடுபடுவீர்கள். நீண்ட நாள் கனவுகள் நனவாகும். மாணவர்களே! விளையாட்டு, படிப்பு என்று அனைத்திலும் ஆர்வம் காட்டுவீர்கள். மதிப்பெண் உயரும். பெற்றோரின் பாசமழையில் நனைவீர்கள். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள்.

தள்ளிப் போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். வேலையாட்களுக்கு உதவுவீர்கள். வாடிக்கையாளர்களின் தேவையறிந்து செயல்படுவதால் லாபம் அதிகரிக்கும். உணவு, இரும்பு, ஸ்பெகுலேஷன் வகைகளால் ஆதாயம் உண்டு. புது பங்குதாரரை சேர்ப்பீர்கள்.

உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். சக ஊழியர்கள் புகழ்வார்கள். புது வாய்ப்புகள், பொறுப்புகள் தேடி வரும்.

விவசாயிகளே!
உங்களின் கோரிக்கைகள் பூர்த்தியாகும். வசதி, வாய்ப்புகள் பெருகும்.

கலைத்துறையினர்களே!
புது வாய்ப்பு கிடைத்து அதிகம் சம்பாதிப்பீர்கள். திடீர் திருப்பங்களும், யோகங்களும் தரும் மாதமிது.

ராசியான தேதிகள்:
பிப்ரவரி 13,14,15,22,23,24,25 மற்றும் மார்ச் 3,4,5,6,12,13,14

சந்திராஷ்டம தினங்கள்:
பிப்ரவரி 17ம் தேதி காலை 8.02மணி முதல் 18,19ம் தேதி காலை 10.30மணி வரை.

மகரம்
தென்றலாய் காணப்பட்டாலும் அவ்வப்போது புயலென மாறும் நீங்கள் பேச்சிலும், செயலிலும் வேகத்தைக் காட்டுபவர்கள். வீரத்துடன் விவேகமும் கொண்டு செயல்படும் நீங்கள், செய்நன்றி மறவாதவர்கள். சூரியன் ராசியை விட்டு விலகி 2ல் நிற்பதால் ஓரளவு கோபம் குறையும். என்றாலும் சில சமயங்களில் உணர்ச்சிவசப்பட்டு பேசுவீர்கள். கண் எரிச்சல், காது வலி வந்து போகும்.

புதன் வலுவான வீடுகளில் செல்வதால் உங்களின் நட்பு வட்டம் விரியும். தந்தைவழி சொத்துகள் வந்து சேரும். வெளி நாட்டில் இருக்கும் உறவினர், நண்பர் உதவுவார்கள். விசா கிடைக்கும். 4ம் வீட்டில் செவ்வாய் ஆட்சி பெற்று நிற்பதால் தாயாருடன் மனத்தாங்கல் வரும். என்றாலும் தாய் வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. வழக்கால் இருந்த சில நெருக்கடிகள் நீங்கும். சகோதரங்களால் செலவுகள் வரக்கூடும்.

ராகுவும் வலுவாகக் காணப்படுவதால் கடந்த கால அனுபவங்களைப் பயன்படுத்தி அனுபவ அறிவாலும், யதார்த்தமான பேச்சாலும் வி.ஐ.பிகளின் மனதில் இடம் பிடிப்பீர்கள். பழைய சிக்கல்கள், பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் நல்ல தீர்வு கிடைக்கும். என்றாலும் ராசிக்கு 12ல் கேதுவும், சனியும் நிற்பதால் வேலைச்சுமை, அலைச்சலால் அவ்வப்போது தூக்கம் குறையும்.

புண்ணிய ஸ்தலங்களிலிருந்து பிரசாதங்கள் வரும். வழிபாட்டு தலங்களில் முதல் மரியாதை கிடைக்கும். உங்கள் ராசிக்கு குருவும், சுக்கிரனும் வலுவாக நிற்பதால் பணவரவு திருப்தி தரும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். நாடாளுபவர்களின் நட்பும் கிடைக்கும்.

குலதெய்வப் பிரார்த்தனைகளையும் நிறைவேற்றுவீர்கள். அரசியல்வாதிகளே! வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டியிருக்கும். கன்னிப் பெண்களே! பெற்றோருக்கு சில ஆலோசனைகள் வழங்குவீர்கள். பள்ளிக் கல்லூரி கால தோழியை சந்திப்பீர்கள்.

மாணவர்களே!
படிப்பில் ஆர்வம் பிறக்கும். கணிதம், மொழிப் பாடங்களுக்கு அதிக நேரம் ஒதுக்குங்கள். வியாபாரத்தில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். புதிய வாடிக்கையாளர்கள் வருகை தருவார்கள். கொடுக்கல், வாங்கலில் இருந்த சிக்கல்கள் விலகும். புதுத் தொழில் தொடங்குவீர்கள். புரோக்கரேஜ், எண்டர்பிரைஸ் வகைகளால் ஆதாயம் உண்டு. கூட்டுத் தொழிலில் சுமுகமான லாபம் உண்டு.

உத்யோகத்தில் தொல்லைகள் அகலும். மேலதிகாரியின் ஆதரவைப் பெறுவீர்கள். உங்களிடம் பொறாமைப்பட்டுக் கொண்டிருந்த சக ஊழியர்கள் உங்களின் பரந்த மனதை புரிந்து கொள்வார்கள். குறை கூறியவர்களுக்கு பதிலடிகொடுக்கும் வகையில் சில வேலைகளை விரைந்து முடிப்பீர்கள்.

சிலருக்கு ப்ரமோஷன் கிடைக்கும். கலைத்துறையினர்களே! கற்பனைத்திறன் அதிகரிக்கும். அயல்நாட்டு நிறுவனங்கள் வாய்ப்பளிக்கும்.

விவசாயிகளே!
எண்ணெய் வித்துக்களால் ஆதாயமடைவீர்கள். வங்கிக் கடன் அடைபடும். புதிய பாதையில் பயணித்து வெற்றி பெறும் மாதமிது.

ராசியான தேதிகள்:
பிப்ரவரி 15, 16, 17, 18, 24, 25, 26, 27 மற்றும் மார்ச் 6, 8, 9, 10, 11.

சந்திராஷ்டம தினங்கள்:
பிப்ரவரி 19ம் தேதி காலை 10.30மணி முதல் 20, 21ம் தேதி பிற்பகல் 1மணி வரை.

கும்பம்
நல்ல நிர்வாகத் திறனும், பரந்த அறிவும் கொண்ட நீங்கள், பிரச்னைகளின் ஆணிவேரைக் கண்டறியும் அசாத்தியத் திறனுள்ளவர்கள். கலகலப்பாகப் பேசுவதுடன் கறாராகவும் இருப்பீர்கள். பூர்வ புண்யாதிபதி புதன் சாதகமாக இருப்பதால் பிள்ளைகளால் அமைதி உண்டு. மகளுக்கு எதிர்பார்த்த படி வரன் அமையும். மகனுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும்.

பூர்வீக சொத்தால் வருமானம் வரும். உறவினர், நண்பர்கள் மதிப்பார்கள். வெளியூர் பயணங்களால் மனநிம்மதி கிட்டும். சூரியன் ராசிக்குள் நிற்பதால் முன்கோபம், மனஇறுக்கம், காரியத் தாமதம் வந்து செல்லும். பெற்றோருடன் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை உடன் செலுத்துங்கள். செவ்வாய் 3ல் வலுவாக தொடர்வதால் நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது சாதகமாக அமையும். தாய்வழியில் மதிப்பு, மரியாதை கூடும்.

ராகுவும் 5ம் வீட்டிலேயே தொடர்வதால் மனக்குழப்பங்களும், தடுமாற்றங்களும் கொஞ்சம் இருந்து கொண்டேயிருக்கும். கேதுவும், சனியும் லாப வீட்டில் வலுவாக நிற்பதால் தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை அறிந்து கொள்வீர்கள். ஹிந்தி, தெலுங்கு மொழி பேசுபவர்களால் திருப்பம் உண்டாகும்.

சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் உங்களுடைய புதிய திட்டங்கள் நிறைவேறும். பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். நீண்ட நெடுநாட்களாக பார்க்க வேண்டுமென்று நினைத்திருந்த நண்பர்களையும் சந்திப்பீர்கள். அரசியல்வாதிகளே! விட்டுக் கொடுத்துப் போக வேண்டி வரும். கன்னிப் பெண்களே! கெட்ட நண்பர்களிடமிருந்து விடுபடுவீர்கள். எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலையும் கிடைக்கும். மாணவர்களே! கடைசி நேரத்தில் படிக்கும் பழக்கத்தைக் கைவிடுங்கள். பெற்றோர் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.

வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். ஆர்வக்கோளாறால் முதலீடு செய்து சிக்கிக் கொள்ள வேண்டாம். இருப்பதை வைத்து சமாளிக்கப் பாருங்கள். வேலையாட்கள், வாடிக்கையாளர்களால் டென்ஷன் அதிகரிக்கும். பழைய பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப் பாருங்கள். பங்குதாரர்களிடம் கறாராக இருங்கள். ஹார்டுவேர்ஸ், எலக்ட்ரிக்கல்ஸ், ஸ்டேஷனரி வகைகளால் லாபமடைவீர்கள்.

உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. மேலதிகாரியைப் பற்றிக் குறை கூற வேண்டாம். இழந்த சலுகைகளை போராடிப் பெறுவீர்கள்.

கலைத்துறையினர்களே!
வசதி, வாய்ப்புகள் உயரும். ஆனால் வீண் வதந்திகளுக்கு பஞ்சமிருக்காது.

விவசாயிகளே!
பூச்சித் தொல்லை, எலித் தொல்லையால் மகசூல் குறையும். பக்கத்து நிலத்துக் காரரை பகைத்துக் கொள்ளாதீர்கள். உணர்ச்சி வசப்படாமல் அறிவுபூர்வமாக முடிவெடுக்க வேண்டிய மாதமிது.

ராசியான தேதிகள்:
17, 18, 19, 20, 26, 27, 28 மற்றும் மார்ச் 1, 3, 8, 9, 11, 13.

சந்திராஷ்டம தினங்கள்:
பிப்ரவரி 21ம் தேதி பிற்பகல் 1மணி முதல் 22, 23ம் தேதி மாலை 4.25 மணி வரை.

மீனம்
கடல்போல் விரிந்த மனதும், கலகலப்பாகப் பேசும் குணமும் உடைய நீங்கள் மனசாட்சிக்குட்பட்டு செயல்படுபவர்கள். உங்கள் ராசிக்கு 12ல் புதனும், சூரியனும் அமர்ந்திருக்கும் போது இந்த மாதம் பிறப்பதால் எதிர்பாராத திடீர் திருப்பங்கள் ஏற்படும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வீடு மாறுவீர்கள். வழக்கு வெற்றி அடையும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும்.

உறவினர், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். 2ல் செவ்வாய் நிற்பதால் சேமிப்புகள் கரையும். சில நேரங்களில் கோபப்பட்டு பேசுவீர்கள். குடும்பத்தில் வாக்குவாதங்கள், ஈகோ பிரச்னைகள் வந்து போகும். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். உடன்பிறந்தவர்களால் சங்கடங்கள் வரும். ராகுபகவான் 4ம் வீட்டில் நுழைந்திருப்பதால் தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்து போகும்.

பூர்வீக சொத்தை அதிக செலவு செய்து சீர்த்திருத்தம் செய்வீர்கள். கேதுவும், சனியும் 10ல் நீடிப்பதால் வேலைச்சுமை இருந்து கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். அக்கம். பக்கம் வீட்டாருடன் அநாவசியப் பேச்சை தவிர்ப்பது நல்லது. உங்களுடைய ராசிக்கு 9ம் வீட்டில் குரு நிற்பதால் வீண் செலவுகள், அலைச்சல்களெல்லாம் குறையும். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு.

அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகளால் ஆதாயமடைவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். சுக்கிரன் வலுவான வீடுகளில் செல்வதால் அழகு, இளமை கூடும். சவால்களில் வெற்றி பெறுவீர்கள். திருமணம் கூடி வரும். புதிதாக வாகனம் வாங்குவீர்கள். வீட்டை விரிவுப்படுத்தி கட்டுவது நல்ல விதத்தில் முடியும். அரசியல்வாதிகளே! பொது விழாக்களுக்கு தலைமை தாங்குவீர்கள்.

கன்னிப்பெண்களே! காதல் கை கூடும். எண்ணங்கள் பூர்த்தியாகும். மாணவர்களே! கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் பரிசு, பாராட்டு பெறுவீர்கள். ஆசிரியரின் ஆதரவு உண்டு. வியாபாரத்தில் பற்று வரவு உயரும். புகழ் பெற்ற நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். பாக்கிகள் வசூலாகும். கடையை அழகுபடுத்தி அதிக வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள்.

வாடிக்கையாளர்களை கவரும் விதமாக புதிய சலுகைகளை அறிவிப்பீர்கள். விலகிச் சென்ற பங்குதாரர்கள் மீண்டும் வந்து இணைவார்கள். ஷேர், ஸ்பெகுலேஷன், ஹோட்டல் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரிக்கு நெருக்கமாவீர்கள். சக ஊழியர்கள் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள்.

சம்பளம் உயரும். கலைத்துறையினர்களே! புதுமையாக சில படைப்புகளை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள்.

விவசாயிகளே! உங்கள் கடன் தள்ளுபடியாகும். ஊரில் மதிப்பு மரியாதை கூடும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும் மாதமிது.

ராசியான தேதிகள்:
பிப்ரவரி 14, 16, 19, 20, 22, 28 மற்றும் மார்ச் 1, 2, 3, 10, 11, 13.

சந்திராஷ்டம தினங்கள்:
பிப்ரவரி 23ம் தேதி மாலை 4.25 மணி முதல் 24, 25ம் தேதி இரவு 9.35 மணி வரை.

- Dina Karan
Name

2019 New Year Rasi Palan,7,2019 Tamil New year Rasi Palan,2,latest,1,Nallur kovil,12,shirdi sai baba,1,ஆலய அறிவித்தல்கள்,2,ஆலயதரிசனம்,41,ஆன்மீகம்,132,இம்மாத பலன்,8,இவ்வார பலன்,2,ஏழரை சனி,1,குரு பெயர்ச்சி பலன்கள் 2019,1,குருபெயர்ச்சி பலன்கள்,17,சுக்ரன் பெயர்ச்சி பலன்கள்,2,விரதம்,3,வீடியோ,1,ஜோதிடம்,138,
ltr
item
Astrology Yarldeepam: மாசி மாதம் ராசிபலன்கள்: 12 ராசிகளில் யாருக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு எச்சரிக்கை?
மாசி மாதம் ராசிபலன்கள்: 12 ராசிகளில் யாருக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு எச்சரிக்கை?
https://4.bp.blogspot.com/-wi24QZ6K3mM/XGKofFMXwZI/AAAAAAAAKKs/XWzPJe8XKgQvXZiIh3ayelo7DRwqbu7IgCK4BGAYYCw/s640/maasi%2Bmatham.jpg
https://4.bp.blogspot.com/-wi24QZ6K3mM/XGKofFMXwZI/AAAAAAAAKKs/XWzPJe8XKgQvXZiIh3ayelo7DRwqbu7IgCK4BGAYYCw/s72-c/maasi%2Bmatham.jpg
Astrology Yarldeepam
http://astrology.yarldeepam.com/2019/02/12.html
http://astrology.yarldeepam.com/
http://astrology.yarldeepam.com/
http://astrology.yarldeepam.com/2019/02/12.html
true
2040982477258416527
UTF-8
அனைத்து பதிவுகளையும் பார்க்க Not found any posts அனைத்தையும் பார்க்க மேலும் படிக்க Reply Cancel reply Delete By முகப்பு PAGES POSTS அனைத்தையும் பார்க்க உங்களுக்கான பரிந்துரைகள் செய்தி பிரிவுகள் ARCHIVE தேடுக அனைத்து பதிவுகள் நீங்கள் தேடியது எங்களிடம் இருக்கும் பதிவுகளுடன் பொருந்தவில்லை Back Home ஞாயிற்றுக்கிழமை திங்கட்கிழமை செவ்வாய்க்கிழமை புதன்கிழமை வியாழக்கிழமை வெள்ளிக்கிழமை சனிக்கிழமை ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன வெள்ளி சனி January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 நிமிடத்திற்கு முன்னர் $$1$$ minutes ago 1 மணிநேரத்திற்கு முன்னர் $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy