
வாக்குறுதி என்பது சத்தியத்திற்கும் மேலானது என்பதை உணர்ந்த நீங்கள் சொன்ன சொல் தவற மாட்டீர்கள்.
இனிய வார்த்தைகள் இரும்புக் கதவையும் திறந்துவிடும் என்பதை புரிந்த நீங்கள் சுவையான பேச்சில் சொக்க வைப்பீர்கள். உங்கள் ராசிக்கு 7ம் வீட்டில் சந்திரனும், சுக்கிரனும் வலுவாக நிற்கும் போது இந்தாஆண்டு பிறப்பதால் அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும்.
சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள். தள்ளிப் போன திருமணப் பேச்சு வார்த்தை கூடி வரும். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். வருடம் தொடங்கும் போது செவ்வாய் 12ம் வீட்டில் நிற்பதால் சுபச் செலவுகள் அதிகரிக்கும். சகோதர, சகோதரிகளால் அவ்வப்போது அலைச்சலும், டென்ஷனும் இருக்கும். என்றாலும் அவர்களால் ஆதாயமும் உண்டு. வழக்கில் அவசர முடிவுகள் வேண்டாம்.
12.02.2019 வரை உங்கள் ராசிக்கு 10ல் கேதுவும், 4ம் வீட்டில் ராகுவும் நீடிப்பதால் அடுக்கடுக்கான வேலைகளால் அவதிக்குள்ளாவீர்கள். உத்யோகத்தில் இடமாற்றங்கள், சம்பள பிரச்னை, மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். தாயாருக்கு முதுகு தண்டு வடத்தில் வலி, தலைச்சுற்றல் வந்து செல்லும்.
வாகனத்தை இயக்கும் போது அலைபேசியில் பேச வேண்டாம். விபத்துகள் நிகழக்கூடும். 13.02.2019 முதல் வருடம் முடியும் வரை ராசிக்கு 9ம் வீட்டில் கேது அமர்வதால் பிதுர்வழி சொத்துப் பிரச்னை தலைத்தூக்கும். தந்தையாருடன் மனஸ்தாபங்கள் வரக்கூடும். அவருக்கு சிறுசிறு அறுவை சிகிச்சைகள், மூட்டு வலி வந்து செல்லும். ஆனால் ராகு 3ம் வீட்டில் அமர்வதால் பயம், படபடப்பு நீங்கும். மனோபலம் அதிகரிக்கும். தள்ளிப் போன விஷயங்கள் முடியும்.
இளைய சகோதர வகையில் இருந்த பிணக்குகள் நீங்கும். ஷேர் மூலம் பணம் வரும். இந்த ஆண்டு முழுக்க சனிபகவான் உங்கள் ராசிக்கு 9ம் வீட்டில் நிற்பதால் தோல்விமனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும். புதிதாக சொத்து வாங்குவீர்கள்.
தந்தைவழியில் உதவிகள் உண்டு. வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். பயணங்கள் அதிகரிக்கும். இந்த ஆண்டு பிறப்பு முதல் 12.03.2019 வரை மற்றும் 19.05.2019 முதல் 27.10.2019 வரை குரு உங்கள் ராசிக்கு 8ம் வீட்டில் நிற்பதால் வீண் அலைக்கழிப்புகள் அதிகரிக்கும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் தீர்ப்பு தாமதமாக வரும். மனதில் இனம்புரியாத கவலைகள் வந்து போகும். தன்னம்பிக்கை குறையும்.
திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். தங்க நகைகளை இரவல் வாங்கவோ, தரவோ வேண்டாம். ஆனால் 13.03.2019 முதல் 18.05.2019 வரை குருபகவான் அதிசார வக்ரமாகியும் மற்றும் 28.10.2019 முதல் வருடம் முடியும் வரை குரு உங்கள் ராசிக்கு 9ம் வீட்டிலேயே அமர்வதால் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். குடும்பத்திலும் மகிழ்ச்சி உண்டு.
வி.ஐ.பிகள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்ளுமளவிற்கு நெருக்கமாவீர்கள். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். குழந்தை பாக்யம் கிடைக்கும். வீட்டில் கூடுதலாக ஒரு தளம் அல்லது அறை அமைக்கும் முயற்சிகள் பலிதமாகும். தந்தையுடனான மோதல்கள் விலகும். அவருக்கிருந்த நோய் விலகும்.
கன்னிப்பெண்களே!
மனதில் மறைக்கத்தெரியாமல் வெளிப்படையாக பேசி விவகாரங்களில் சிக்கித்தவித்தீர்களே! இனி இடம், பொருள், ஏவல் அறிந்து பேசுவீர்கள். காத்திருந்ததற்கேற்ப நல்ல கணவர் வந்தமைவார்.
மாணவர்களே!
உங்களால்தான் குடும்பம் தலைநிமிரும் என்பதை உணர்ந்து படிக்கப்பாருங்கள். கெட்ட நண்பர்களை ஒதுக்குங்கள். கடைசி நேரத்தில் படிப்பதை தவிர்த்து விடுங்கள்.
அரசியல்வாதிகளே!
உட்கட்சி பூசல், எதிர்க்கட்சியைப் பற்றி விமர்சனம் என்று நேரத்தை வீணடிக்காமல் ஆக்கப்பூர்வமாக செயல்படப்பாருங்கள்.
வியாபாரிகளே!
எதைத் தொட்டாலும் நட்டத்தில் முடிந்ததே! இனி புதுப் புது திட்டங்களால் போட்டியாளர்களை திணறடிப்பீர்கள். தேங்கிக்கிடந்த சரக்குகளை சாமார்த்தியமாக விற்றுத்தீர்ப்பீர்கள். பழைய வேலையாட்களை மாற்றிவிட்டு புதியவர்களை நியமித்தாலும் அவர்கள் மீது ஒரு கண் வையுங்கள்.
வாடிக்கையாளர்களை கவர சலுகைத் திட்டங்களை அறிவிப்பீர்கள். கொடுக்கல்வாங்கலில் இருந்த சிக்கல்கள் தீரும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களிடையே இருந்து வந்த கருத்துவேறுபாடுகள் மறையும். விலகிச் சென்ற பங்குதாரர்கள் மீண்டும் இணைவார்கள்.
உத்யோகஸ்தர்களே!
பதவி உயர்வு கிடைக்காமல் தவித்தீர்களே! அதிகாரிகளால் அலைக்கழிக்கப்பட்டீர்களே! சக ஊழியர்களாலும் தர்மசங்கடமான சூழ்நிலைக்கு தள்ளப் பட்டீர்களே! இனி அந்த அவல நிலை மாறும். எதிர்பார்த்த பதவியுயர்வு, சம்பள உயர்வு எல்லாம் இப்பொழுது கிட்டும். சக ஊழியர்கள் உங்களிடம் அன்பாக பேசினாலும் மேலதிகாரியிடம் உங்களை புகார் செய்து கொண்டு தான் இருப்பார்கள். கணினி துறையினர்களுக்கு புது வாய்ப்புகளும் தேடி வரும்.
கலைத்துறையினர்களே!
பெரிய நிறுவனம் உங்களை அழைத்துப் பேசும். கிடைக்கும் வாய்ப்புகளையும் தக்க வைத்துக் கொள்ளுங்கள்.
விவசாயிகளே!
வற்றிய கிணறு சுரக்கும். டிராக்டர் வாங்க லோன் கிடைக்கும். விளைச்சலை அதிகப்படுத்துவீர்கள். ஆரம்பத்தில் பணவரவையும், வெற்றியையும் தந்தாலும் பிற்பகுதியில் அலைச்சலையும், செலவினங்களையும் தரும் வருடமிது.