
நுனி மரத்தில் அமர்ந்து கொண்டு அடிமரத்தை வெட்டக் கூடாது என்பதை அறிந்த நீங்கள், உண்ட வீட்டிற்கு ரெண்டகம் நினைக்காதவர்கள்.
செய்நன்றியை ஒருபோதும் மறவாத நீங்கள், தன்னை எதிரியாக நினைத்தவர்களுக்கும் நல்லதே நினைக்கும் குணம் படைத்தவர்கள்.
உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் சுக்கிரனும், சந்திரனும் நிற்கும் போது இந்த புத்தாண்டு பிறப்பதால் எதையும் சாதித்துக் காட்டும் மன வலிமை பிறக்கும். நாள்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை இனி கைக்கு வரும். கனிவான பேச்சால் காரியம் முடிப்பீர்கள். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும்.
வீட்டிற்குள் நுழைந்தாலே ஒரு போர்க்களம் போல் தெரிந்ததே, இனி குடும்பத்தில் அமைதி நிலவும். உங்கள் பேச்சுக்கு முக்கியத்துவம் தருவார்கள். மனைவிவழியில் இருந்த பிணக்குகள் நீங்கும். பூர்வீக சொத்து பங்கை கேட்டு வாங்குவீர்கள்.
பிள்ளைகளுக்காக எதையும் சேர்த்து வைக்க வில்லையே என்று புலம்புவீர்களே, இனி அவர்களுக்காக சொத்து சேர்ப்பீர்கள். அவர்களின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். மகன் உங்களைப் புரிந்துக் கொள்வாள். அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் புது வேலை கிடைக்கும். இந்த வருடம் பிறக்கும் போது செவ்வாய் 10ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் புது பொறுப்பும், பதவியும் தேடி வரும்.
வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். அரசாங்க அதிகாரிகளின் நட்புறவு கிட்டும். ஒரு சொத்தை விற்று பழைய சிக்கலைத் தீர்ப்பீர்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்னைகள் தீர்வுக்கு வரும். புதிதாக வீடு, வாகனம் வாங்குவீர்கள். சகோதர சகோதரிகள் ஒத்தாசையாக இருப்பார்கள்.
மனைவிவழி உறவினர்களால் உதாசீனப்படுத்தப்பட்டீர்களே! இனி மாமனார், மாமியார், மச்சினர் மதிப்பார்கள். தாய்வழியில் மதிப்பு, மரியாதை கூடும். உங்களை அழுத்திக் கொண்டிருந்த தாழ்வுமனப்பான்மை விலகும். 12.02.2019 வரை உங்கள் ராசிக்கு 2ல் ராகுவும், 8ம் வீட்டில் கேதுவும் நிற்பதால் எதிலும் பிடிப்பற்றப் போக்கு, பிறர்மீது நம்பிக்கையின்மை, வீண் விரயம் வந்துச் செல்லும்.
சாதாரணமாகப் பேச போய் சண்டையில் முடியும். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். பழைய கடன் பிரச்னை அவ்வப்போது மனசை வாட்டும். 13.02.2019 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்குள் ராகுவும், 7ல் கேதுவும் அமர்வதால் எதிலும் ஒருவித பயம், படபடப்பு, ஒற்றை தலை வலி, செரிமானக் கோளாறு வந்து செல்லும்.
வாயுத் தொந்தரவால் நெஞ்சு வலிக்கும். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். கணவன்மனைவிக்குள் வரும் சின்ன சின்ன பிரச்னைகளையெல்லாம் பெரிதுபடுத்திக் கொண்டிருக்காதீர்கள். வீண் சந்தேகத்தை விலக்கி கொள்ளுங்கள். ஈகோவை தவிர்க்கப்பாருங்கள்.
இந்த ஆண்டு பிறப்பு முதல் 12.03.2019 வரை மற்றும் 19.05.2019 முதல் 27.10.2019 வரை உங்கள் ராசிக்கு 6ம் வீட்டில் குருபகவான் நிற்பதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். வங்கிக் காசோலையில் முன்னரே கையொப்பமிட்டு வைக்காதீர்கள்.
ஆனால் 13.03.2019 முதல் 18.05.2019 வரை குருபகவான் அதிசார வக்ரமாகியும் மற்றும் 28.10.2019 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு 7ம் வீட்டில் அமர்ந்து உங்களைப் பார்க்க இருப்பதால் உங்களிடம் மறைந்து கிடந்த திறமைகளை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பம் கிடைக்கும். தள்ளிப் போன திருமணம் கூடி வரும். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கணவன் மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும்.
மருத்துவ சிகிச்சைக்குப் பின்னும் குழந்தை பாக்யம் கிடைக்கவில்லையே என வருந்தினீர்களே! இந்த வருடத்தில் வாரிசு உருவாகும். விலை உயர்ந்த தங்க ஆபரணம் வாங்குவீர்கள். ஆரோக்யம் சீராகும். ஏதோ ஒன்றை இழந்ததைப் போல இருந்தீர்களே! அந்த நிலை மாறி உற்சாகம் அடைவீர்கள். கட்டிட வேலைகளைத் தொடங்குவீர்கள். வங்கிக் கடன் உதவி கிடைக்கும். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள்.
சொந்த பந்தங்களின் சுயரூபத்தை தெரிந்துக் கொண்டு அதற்கேற்ப இனி செயல்படுவீர்கள். இந்த ஆண்டு முழுக்க சனி 7ல் நின்று கண்டகச் சனியாக வருவதால் கணவன் மனைவிக்குள் வீண் சந்தேகம், ஈகோப் பிரச்னையால் பிரிவுகள் வரக்கூடும். மனைவிக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். கவன குறைவால் விலை உயர்ந்த நகை, பணம், செல்போனை இழக்க நேரிடும். யாரையும் யாருக்கும் சிபாரிசு செய்ய வேண்டாம். நயமாகப் பேசுபவர்களை நம்பி ஏமாற வேண்டாம். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை இருந்துக் கொண்டேயி இருக்கும்.
கன்னிப்பெண்களே!
காதல் விவகாரத்தில் தள்ளி இருங்கள். சிலரின் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாறாதீர்கள். முகப்பரு, தோலில் நமைச்சல், கனவுத் தொல்லை வந்து நீங்கும். பெற்றோரை தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள். உயர்கல்வியை கொஞ்சம் போராடி முடிப்பீர்கள்.
மாணவர்களே!
மொத்தமாக படித்துக் கொள்ளலாம் என்று தள்ளிப் போடாமல் அன்றைய பாடங்களை அன்றே படித்து விடுவது நல்லது. பெற்றோரின் அறிவுரையை அலட்சியப்படுத்தாதீர்கள். கணிதம், அறிவியல் பாடத்திற்கு கூடுதல் நேரம் ஒதுக்கி படியுங்கள். தேர்வில் மதிப்பெண் உயரும்.
அரசியல்வாதிகளே!
கட்சிக்குள் இருக்கும் சிலரே உங்கள் காலை வாரப்பார்ப்பார்கள். கவனமாக இருங்கள். தலைமையிடம் உங்களைப் பற்றி சிலர் புகார் பட்டியல் வாசிப்பார்கள்.
வியாபாரிகளே!
பக்கத்துக் கடைக்காரரைப் பார்த்து பெரிய முதலீடுகள் போட்டு சிக்கிக் கொள்ளாதீர்கள். வாடிக்கையாளர்களை அதிகப்படுத்த லாபத்தைக் குறைத்து விற்பனை செய்ய வேண்டி வரும். வேலையாட்களால் பிரச்னைகள் வரக்கூடும்.
திடீரென்று அறிமுகமாகுபவர்கள் நயமாகப் பேசுகிறார்கள் என்று நம்பி பெரிய தொகையை கடனாக தர வேண்டாம். என்றாலும் கணிசமாக லாபம் உயரும். உணவு, புரோக்கரேஜ், கமிஷசன், எலக்ட்ரிக்கல் வகைகளால் ஆதாயமடைவீர்கள். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களுடன் மோதல்கள் வெடிக்கும்.
உத்யோகஸ்தர்களே!
மேலதிகாரியால் அவ்வப்போது மன உளைச்சல் வந்தாலும், உங்களை நம்பித்தான் முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். அலுவலக சூட்சுமங்கள் அத்துப்படியாகும். காலம் தாழ்த்தாமல் பணிகளை விரைந்து முடிக்கப்பாருங்கள். சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். விருப்பமற்ற இடமாற்றம் உண்டு. வருட பிற்பகுதியில் பதவி உயரும்.
கலைஞர்களே!
புதிய வாய்ப்புகள் வரும். ஒருபுறம் விமர்சனம் இருந்தாலும் மற்றொரு புறம் கடின உழைப்பால் சாதித்துக் காட்டுவீர்கள்.
விவசாயிகளே!
கண்டதைப் போட்டு மண்ணை பாழடித்துவிடாதீர்கள். விளைச்சலை அதிகப்படுத்த இயற்கை உரங்களை பயன்படுத்துங்கள். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பதுடன் தன்நிலையை தக்க வைத்துக் கொள்ள வேண்டிய வருடமிது.