
சிம்ம ராசியினரே! நல்லதோ, அல்லதோ முடிவெடுத்து விட்டால் முன் வைத்த காலைப் பின் வைக்காமல் முடித்துக் காட்டுவதில் வல்லவர்கள்.
எங்கும் எதிலும் முதலிடம் பிடிக்க எண்ணும் நீங்கள், யாருக்காகவும் எதற்காகவும் தனது கொள்கையை விட்டுக்கொடுக்க மாட்டீர்கள்.
உங்கள் ராசிக்கு 3வது வீட்டில் இந்த புத்தாண்டு பிறப்பதால் துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புதியவர்கள் அறிமுகமாவார்கள். வர வேண்டிய பணமெல்லாம் கைக்கு வரும்.
வருங்காலத்திற்காக சேமிக்கத் தொடங்குவீர்கள். வெகுநாட்களாக வழக்குகள் இழுபறியாகிக் கொண்டிருந்ததே! இனி சாதகமாக முடியும்.
உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் புதன் நிற்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் பிரபலங்களின் தொடர்பு கிடைக்கும். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வருவார்கள்.
மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனின் அலட்சியப் போக்கு மாறும். விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். வாகன வசதி பெருகும்.
செவ்வாய் 8ல் நிற்கும் போது இந்த ஆண்டு பிறப்பதால் உடன்பிறந்தவர்களுடன் மனஸ்தாபங்கள் வரும். சொத்து விஷயங்களை சுமுகமாக பேசித் தீர்க்கப் பாருங்கள். மனைவிக்கு சிறுசிறு அறுவை சிகிச்சை, கருத்துமோதல் வரக்கூடும். பழைய வழக்கில் வழக்கறிஞரை கலந்தாலோசித்து முடிவுகள் எடுப்பது நல்லது.
அரசாங்க அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். பழைய கசப்பான சம்பவங்களை அடிக்கடி பேசவேண்டாம். அண்டை அயலாருடன் அளவாக பழகுங்கள். 12.02.2019 வரை உங்கள் ராசிக்கு 6ம் வீட்டில் கேது பகவான் நிற்பதால் உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள்.
மகான்கள், ஆன்மிகவாதிகளை சந்தித்து ஆசி பெறுவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். ராசிக்கு 12ம் வீட்டில் ராகுவும் நிற்பதால் மற்றவர்களுக்காக ஜாமீன் கையெழுத்திடாதீர்கள். கடந்த காலத்தில் ஏற்பட்ட இழப்புகள், ஏமாற்றங்களை நினைத்து அவ்வப்போது மனம் கலங்குவீர்கள்.
13.02.2019 முதல் வருடம் முடியும் வரை கேது 5ம் வீட்டில் அமர்வதால் பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள்.
அவர்களின் உயர்கல்வி, உத்யோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் தாமதமாக முடியும். கர்ப்பிணிப் பெண்கள் தூரத்துப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. பூர்வீக சொத்துப் பிரச்னை வெடிக்கும். ஆனால் ராகு 11ம் வீட்டில் நீடிப்பதால் திடீர் பணவரவு உண்டு. வேற்றுமதத்தவர்கள் உதவுவார்கள். சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் இணைவீர்கள்.
இந்தாண்டு முழுக்க சனி 5ல் நிற்பதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் தாமதமாகும். அவர்கள் போக்கிலேயே அவர்களை விட்டுப் பிடிப்பது நல்லது.
கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். பூர்வீக சொத்துப் பிரச்னையில் கொஞ்சம் தள்ளியிருங்கள். பால்ய நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும்.
இந்த ஆண்டு பிறப்பு முதல் 12.03.2019 வரை மற்றும் 19.05.2019 முதல் 27.10.2019 வரை குரு உங்கள் ராசிக்கு 4ம் வீட்டில் நிற்பதால் வேலைச்சுமையால் எப்போதும் பதட்டத்துடன் காணப்படுவீர்கள். தாயாருடன் மோதல்கள், அவருக்கு மூச்சுப் பிடிப்பு, மூட்டு வலி வந்து நீங்கும்.
தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வீட்டை கூடுதல் செலவு செய்து சீர் செய்ய வேண்டி வரும். வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும். ஆனால் 13.03.2019 முதல் 18.05.2019 வரை குருபகவான் அதிசார வக்ரமாகியும் மற்றும் 28.10.2019 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு குரு 5ம் வீட்டிலேயே வந்தமர்வதால் மனஇறுக்கங்கள் நீங்கும். பணப்பற்றாக்குறை அகலும். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். புது வீடு கட்டிப் புகுவீர்கள்.
குடும்பத்தில் நிம்மதி உண்டு. வருமானத்தை உயர்த்த புது வழி கிடைக்கும். மழலை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். மகனுக்கு எதிர்பார்த்த குடும்பத்திலிருந்து நல்ல பெண் அமைவார். மகளுக்கு வேலை கிடைக்கும். வெளிவட்டாரத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.
கன்னிப்பெண்களே!
அடிக்கடி முகம் சோர்ந்து காணப்பட்டீர்களே, ஏதோ இனந்தெரியாத கவலை உங்களை வாட்டியதே, இனி அவற்றிலிருந்து விடுபடுவீர்கள். உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். தோழிகளுக்கெல்லாம் திருமணமாகி விட்டதே! நமக்கு இன்னும் ஆகவில்லையே என வேதனைப்பட்டீர்களே!
இனி கண்ணுக்கு அழகான கணவர் வந்தமைவார். தாயாருடன் அடிக்கடி மனஸ்தாபங்கள் வந்ததே! அந்த நிலை மாறும். தடைபட்ட உயர்கல்வியை மீண்டும் தொடர்வீர்கள். உங்கள் தகுதிக்கேற்ற நல்ல வேலையும் கிடைக்கும்.
மாணவர்களே!
அதிகாலையில் எழுந்து படிக்கும் பழக்கத்தை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். கவிதை, கட்டுரை, இலக்கியப் போட்டிகளிலும் திறமையை வெளிப்படுத்தி பரிசு, பாராட்டுகளை பெறுவீர்கள். உயர்கல்வியில் கூடுதல் மதிப்பெண் எடுத்து பெற்றோரின் தலை நிமிரும்படியாக செய்வீர்கள்.
அரசியல்வாதிகளே!
புதிய பொறுப்புகளை தலைமை ஒப்படைக்கும். சகாக்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். ஆதாரமில்லாமல் எதிர்க்கட்சியினரை விமர்சிக்க வேண்டாம்.
வியாபாரிகளே!
உங்களுக்குப் பின்னால் தொழில் தொடங்கியவர்கள் கூட முன்னேற்றமடைந்தார்களே! வட்டிக்கு வாங்கி கடையை விரிவுபடுத்தி நஷ்டப்பட்டீர்களே!
இனி உங்களின் மாறுபட்ட அணுகுமுறையால் லாபமீட்டுவீர்கள். திடீர் லாபம்,பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தங்கள் கூடிவரும். மருந்து, உணவு, ரியல் எஸ்டேட் வகைகளால் லாபம் உண்டு. கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் புரிந்து கொள்ளாமல் அவ்வப்போது பிரச்னை செய்தார்களே! இனி பணிந்து போவார்கள்.
உத்யோகஸ்தர்களே!
பணிகளை முடிப்பதிலிருந்த தேக்கநிலை மாறும். மேலதிகாரி உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வருடத் தொடக்கத்திலேயே பதவியுயர்வு, சம்பள உயர்வு மற்றும் புதிய வாய்ப்புகளை எதிர்பார்க்கலாம். வெளிநாட்டுத்தொடர்புள்ள நிறுவனங்களிலிருந்து உங்களுக்கு அழைப்பு வரும். கணினி துறையினர்கள் உற்சாகத்துடன் காணப்படுவார்கள். வேலைச்சுமை அதிகரிக்கத்தான் செய்யும்.
கலைத்துறையினர்களே!
இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். சம்பளப் பாக்கி கைக்கு வரும். அரசால் ஆதாயமுண்டு.
விவசாயிகளே!
காட்டிய இடத்திலெல்லாம் கையெழுத்திட்டு மாட்டிக்கொண்டீர்களே! இனி அடகிலிருந்த பத்திரங்களை மீட்பீர்கள். இந்த 2019ம் ஆண்டு உங்களை விஸ்வரூபம் எடுக்க வைப்பதுடன், பிற்பகுதியில் சாதனையாளராகவும் மாற்றும்.