
கன்னி ராசியினரே! பிரச்னைகளை கண்டு அலட்டிக் கொள்ளாத நீங்கள், எதுவாக இருந்தாலும் சந்திக்க ஒரு போதும் தயங்கமாட்டீர்கள்.
எளிமையான வாழ்க்கையும், எதார்த்தமான பேச்சும் கொண்ட நீங்கள், மனசாட்சிக்கு மதிப்பளித்து நடப்பவர்கள். உங்களுக்கு 2வது ராசியில் சந்திரனும், சுக்கிரனும் வலுவாக நிற்கும் போதுஇந்த புத்தாண்டு பிறப்பதால் எதிர்பார்த்திருந்த தொகை வந்து சேரும்.
குடும்பத்தில் அமைதி பிறக்கும். உங்கள் ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். அனுபவ பூர்வமாகவும், யதார்த்தமாகவும் பேசுவீர்கள். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். தடைபட்ட பல காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். குடும்பத்தில் குழப்பங்களை ஏற்படுத்திய உறவினர்கள்,நண்பர்களின் சுயரூபத்தை கண்டறிந்து ஒதுக்குவீர்கள்.
கணவன் மனைவிக்குள் இனி மனம் விட்டுப் பேசுவீர்கள். வீண் சந்தேகம் விலகும். குடும்ப வருமானத்தை உயர்த்த கூடுதல் நேரம் ஒதுக்கி உழைப்பீர்கள்.
இந்த ஆண்டு பிறக்கும் போது 7ல் செவ்வாய் நிற்பதால் மனைவியுடன் விவாதங்கள், சந்தேகம், பிரிவு வரும்.
முன்கோபத்தை குறைக்கப்பாருங்கள். உடன் பிறந்தவர்களால் மனஸ்தாபங்கள் வெடிக்கும். பூர்வீகச் சொத்து விஷயங்களில் கவனம் தேவை. இந்த ஆண்டு தொடக்கம் முதல் 12.02.2019 வரை உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் கேது நிற்பதால் பிள்ளைகள் கோபப்படுவார்கள்.
அவர்களிடம் உங்களின் எண்ணங்களை திணிக்க வேண்டாம். கர்ப்பிணிப் பெண்கள் அதிக எடையுள்ள சுமைகளை தூக்க வேண்டாம். கர்ப்பச் சிதைவு ஏற்படக்கூடும். பூர்வீகச் சொத்தை சரியாக பராமரிக்க முடியவில்லையே என வருத்தப்படுவீர்கள்.
ராகு லாப வீட்டில் நிற்பதால் ஷேர் மூலம் பணம் வரும். கடந்த கால இனிய அனுபவங்களை நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். அரசால் அனுகூலம் உண்டு.
ஆனால் 13.02.2019முதல் வருடம் முடியும் வரை கேது 4ம் வீட்டிலும், ராகு 10ம் வீட்டிலும் அமர்வதால் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். எதிர்காலம் பற்றிய கவலை அடி மனதில் நிழலாடும். வாகனத்தை இயக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா எனப் பார்த்துக் கொள்ளுங்கள்.
அவ்வப்போது நேர்மறை எண்ணங்களை உள்மனதில் வளர்த்துக் கொள்வது நல்லது. இந்த ஆண்டு முழுக்க சனிபகவான் சாதகமாக இல்லாததால் மனத்தாங்கலால் தாயாரை பிரிய வேண்டி வரும். தாய்வழி உறவினர்களுடனும் கருத்து மோதல்கள் வரும்.
வீட்டில் களவுப் போக வாய்ப்பிருப்பதால் குடும்பத்தினருடன் வெளியூர் பயணிப்பதாக இருந்தால் முன்கூட்டியே பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துவிட்டு செல்வது நல்லது. பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். பூர்வீக சொத்துப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வழக்கால் நிம்மதி இழப்பீர்கள்.
இந்த ஆண்டு பிறப்பு முதல் 12.03.2019 வரை மற்றும் 19.05.2019 முதல் 27.10.2019 வரை குரு உங்கள் ராசிக்கு 3ம் வீட்டில் நிற்பதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளைப் பார்க்க வேண்டிய சூழ்நிலையும் உருவாகும்.
ஆனால் 13.03.2019 முதல் 18.05.2019 வரை குருபகவான் அதிசார வக்ரமாகியும் மற்றும் 28.10.2019 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு குரு 4ம் வீட்டிலேயே அமர்வதால் இழுபறியாக இருந்த காரியங்களெல்லாம் முடிவடையும். என்றாலும் தாயாருக்கு முதுகு, மூட்டு வலி, சிறுசிறு அறுவை சிகிச்சைகள் வந்து செல்லும். தாயார், அம்மான், அத்தை வழியில் மனஸ்தாபம் வந்து நீங்கும்.
வாகனத்தில் செல்லும் போது தலைக்கவசம் அணிந்து செல்லுங்கள். சொத்து வாங்கும் போதும் சட்ட நிபுணர்களை கலந்தாலோசித்து தாய்பத்திரம், வில்லங்க சான்றிதழ்களையெல்லாம் சரி பார்த்து வாங்குங்கள். உங்களைப் பற்றிய விமர்சனங்க அதிகரிக்கும்.
கன்னிப்பெண்களே!
உயர்கல்வியில் அலட்சியப் போக்கு வேண்டாம். காதல் விவகாரத்தை தள்ளி வையுங்கள். பெற்றோரின் ஆலோசனைக்கு முக்கியத்துவமளியுங்கள். உடல் உஷ்ணத்தால் வயிற்று வலி, வேனல் கட்டி வந்து நீங்கும்.
மாணவர்களே!
ஏனோ தானோ என்றில்லாமல் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். கணிதம், அறிவியல் பாடங்களுக்கு அதிக நேரம் ஒதுக்குங்கள். ஆசிரியர்களிடம் சந்தேகங்களை கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். விடைகளை எழுதிப் பாருங்கள். கூடா நண்பர்களை தவிர்த்து நல்ல நட்புச் சூழலை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
அரசியல்வாதிகளே!
உட்கட்சிப் பூசலில் தலையிடாமல் ஒதுங்கியிருங்கள். தொகுதி நிலவரங்களை உடனுக்குடன் மேலிடத்திற்கு கொண்டு செல்லுங்கள். இருக்கும் பதவியை தக்க வைத்துக் கொள்ள கொஞ்சம் போராட வேண்டிருக்கும்.
வியாபாரிகளே!
பழைய வாடிக்கையாளர்களை ஈர்க்க புது திட்டங்களை செயல்படுத்துவீர்கள். மற்றவர்கள் சொல்கிறார்கள் என நினைத்து பெரிய முதலீடுகளை போட்டு மாட்டிக் கொள்ளாதீர்கள். பழைய சரக்குகள் விற்றுத்தீரும். தொல்லை கொடுத்த வேலையாட்கள் மாற்றிவிட்டு அனுபவமிகுந்தவர்களை பணியில் அமர்த்துவீர்கள்.
ஸ்டேஷனரி, பப்ளிகேஷன், உணவு, எலக்ட்ரிக்கல்ஸ், டிராவல்ஸ், கட்டிட உதிரி பாகங்களால் ஆதாயமடைவீர்கள். சங்கத்தின் சார்பில் கௌரவப்பதவிகள் தேடி வரும். உங்களிடமிருந்து பிரிந்து சென்ற அனுபவமிக்க வேலையாட்கள் மீண்டும் உங்களைத் தேடி வருவார்கள். கூட்டுத்தொழிலில் புதிய பங்குதாரர்களை சேர்ப்பீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். புது ஏஜென்ஸி எடுப்பீர்கள்.
உத்யோகஸ்தர்களே!
வருட முற்பகுதியில் வேலைச்சுமை அதிகரிக்கும். சிலருக்கு இடமாற்றங்களும் வரும். மேலதிகாரியின் தவறுகளை மேலிடத்திற்கு சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். சக ஊழியர்கள் உங்களை உரசிப் பார்ப்பார்கள். பிற்பகுதியில் மன நிம்மதியுண்டு. சம்பள பாக்கியை போராடிக் பெறுவீர்கள். எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். கணினி துறையினர்களே! புதிய வாய்ப்புகள் வந்தால் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து முடிவெடுப்பது நல்லது.
கலைத்துறையினர்களே!
தள்ளிப் போய்க் கொண்டிருந்த வாய்ப்பு இனி தேடி வரும். உங்களின் படைப்புகளைப் பற்றி கிசுகிசுக்கள் வரத்தான் செய்யும்.
விவசாயிகளே!
விளைச்சலை அதிகப்படுத்த மாற்றுபயிரிடுங்கள். பழுதான பம்புசெட்டை சீர் செய்வீர்கள். நெல், கரும்பு, நிலக்கடலை மூலம் ஆதாயமடைவீர்கள். பூச்சித்தொல்லை விலகும். காய்கறி, பழவகைகளால் லாபமடைவீர்கள். தண்ணீர் வசதி பெருகும். இந்த 2019ம் ஆண்டு அவ்வப்போது உங்களை மட்டம் தட்டப் பார்த்தாலும் விடா முயற்சியாலும், தொலைநோக்குச் சிந்தனையாலும் முன்னேற வைக்கும்.