04.10.2018 முதல் 04.11.2019 வரை
அஸ்வினி
எப்பொழுதும் நம்பிக்கையுணர்வுடன் செயல்படத் துடிக்கும் அசுவினி நட்சத்திர அன்பர்களே! இந்த குரு பெயர்ச்சியால் பொதுவாக வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
வெளியிடங்களில் செல்வாக்கு உயரும். குடும்பத்தில் சகோதர சகோதரிகளுக்கு இதுவரை தடைப்பட்டிருந்த காரியங்கள் அனைத்தும் நடக்கும்.
திருமணத் தடை, குழந்தை பாக்கியத்தில் தடை போன்றவை சரியாகும். சுப நிகழ்ச்சிகள் அனைத்தும் இனிதே நடந்தேறும். வீட்டிற்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் வாங்கி மகிழ்வீர்கள்.
தொழிலில் சில நஷ்டங்களையும், நலிவுகளையும் சந்தித்திருப்பீர்கள். எடுத்த காரியத்தில் தடை, முதலீடு செய்த அசல் கிடைக்காமல் நஷ்டம் என மோசமாக இருந்த காலகட்டம் மாறும். தொழிலில் இதுவரை விரயமான பணம் திரும்ப கிடைக்கும். உத்யோகஸ்தர்களுக்கு இதுவரை வர வேண்டிய பணம் வந்து சேரும்.
ஊதிய உயர்வுடன் கூடிய பணி இடமாற்றம் அல்லது பதவி உயர்வு கிடைக்கலாம். பெண்களின் காரியங்கள் அனைத்திலும் குரு பகவான் துணை நிற்பார். காரியத் தடைகள் விலகும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும்.
மாணவர்களுக்கு பெரிய மாற்றம் இல்லை என்றாலும் எதிலும் கவனமுடன் செயல்பட்டால் பின்னடைவு இல்லை. அரசியல்துறையினருக்கு முன்னேற்றம் தரும் பெயர்ச்சியாக இருக்கும்.
உங்கள் மேலிடத்தில் இருந்து உங்களுக்கு சில புதிய மற்றும் முக்கிய பொறுப்புகள் தருவார்கள். கலைத்துறையினர் லாபம் கிடைக்கப் பெறுவார்கள். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். கதை எழுதுபவர்களுக்கு கற்பனைத் திறன் அதிகரிக்கும்.
பரிகாரம்:
தினமும் விநாயகரை வழிபட்டு காரியத்தை துவங்குங்கள்.
பரணி
பிறர் மனதை புரிந்து கொண்டு செயல் படும் பரணி நட்சத்திர அன்பர்களே! இந்த குரு பெயர்ச்சியால் தொழிலில் ஏற்றம் காணப்படும் என்பதை பொதுவாக உங்கள் நட்சத்திரத்திற்கு சொல்லலாம்.
மற்றவர்களின் தலையீடு குடும்பத்தில் இல்லாதவாறு பார்த்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் யாருக்கேனும் உடல்நிலையில் தொய்வு இருந்திருந்தால், அவர்கள் முன்னேற குரு பகவான் அருள்புரிவார். தந்தையாருடன் இருந்து வந்த சில கருத்து வேறுபாடுகள் முடிவுக்கு வரும். இருவரும் பேசி முடிவுகளை எடுப்பீர்கள்.
தொழிலில் இருந்த தடைகள் நீங்கும். உங்களை ஏமாற்றுபவர்களை கண்டுபிடிப்பீர்கள். ஒரு விஷயத்தில் பணத்தை முதலீடு செய்யும் முன்பு யோசித்து செயல்படும் எண்ணம் தோன்றும்.
யாரையும் நம்பி ஏமாறாமல் கவனமுடன் இருப்பீர்கள். உத்யோகஸ்தர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி மகிழ்ச்சி தரக்கூடியதாகவே இருக்கும். வேலையில் இதுவரை இருந்து வந்த தடைகள் விலகும். முழு மனதுடன் வேலையில் ஈடுபடுவீர்கள்.
பெண்களில் திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். மாணவர்கள் தங்களின் பேச்சுத்திறமையால் முன்னேற முடியும். எந்த சந்தேகமாக இருந்தாலும் கேட்டு தெளிவு பெற்றுக்கொள்ளுங்கள்.
அரசியல்துறையினர் கட்சிப் பணிகளில் சிரத்தையுடன் செயல்பட்டால் உங்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். கட்சித் தொண்டர்கள் ஆதரவாக இருப்பார்கள். கலைத்துறையினரைத் தேடி தயாரிப்பாளர்கள் வருவார்கள். உங்கள் வாழ்க்கை முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும். கவலை வேண்டாம்.
பரிகாரம்
வெள்ளிக்கிழமைதோறும் பெருமாள் கோயிலுள்ள சக்கரத்தாழ்வாரை பதினொருமுறை வலம் வரவும்.
கார்த்திகை
நல்ல உள்ளத்தால் உயர்ந்த நிலையைப் பெறும் கிருத்திகை நட்சத்திர அன்பர்களே! இந்த குரு பெயர்ச்சியால் தந்தைக்கும் உங்களுக்கும் இருந்த பகைமை உணர்வு மாறும்.
தொழிலிலும் ஏற்றம் உண்டாகும். குடும்பத்தில் தந்தை வழி உறவினர்களால் இருந்த சில பிரச்னைகள் அகலும். சிலருக்கு தந்தையின் உடல் நிலையில் பிரச்னைகள் இருந்திருக்கும். அதிலும் முன்னேற்றம் இருக்கும். உறவினர்களுடன் இருந்து வந்த பிரச்னைகள் விலகி மன நிம்மதி அடைவீர்கள்.
தொழில் செய்பவர்கள் தங்கள் காரியங்களை தாங்களே முன்னின்று நடத்துவதால் இடைத்தரகர்களால் ஏற்படும் விரயத்தையும் குறைக்கலாம்.
புதிய தொழில் தொடங்குவதாக இருந்தாலும் அதிக முதலீடு செய்யாமல் தொடங்க சூழல் உருவாகும். உத்யோகஸ்தர்களுக்கு நிம்மதியாக வேலை செய்யும் சூழல் உருவாகும். உங்கள் வாய் சாமர்த்தியத்தால் சில காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். தவறைத் தட்டிக்கேட்கிறேன் என்ற பெயரில் அடிதடியில் இறங்க வேண்டாம்.
பெண்களுக்கு நீங்கள் விரும்பிய பதவி உயர்வு, பணி இடமாற்றம் போன்ற அனைத்தும் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகள் இனிதே நடைபெறும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டு உங்களுக்குத் தெரிந்ததை மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுங்கள்.
தேர்வில் வெற்றி பெறலாம். அரசியல்துறையினர் தொகுதி மக்கள் கோரிக்கைகளை மனமுவந்து நிறைவேற்றுவீர்கள். இதனால் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிப்பீர்கள். கலைத்துறையினர் இந்த கால கட்டத்தினை பயன் படுத்திக் கொண்டால் உங்கள் வாழ்க்கையின் மிகப் பெரிய திருப்பு முனையான காலமாக இருக்கும்.
பரிகாரம்:
மாதம்தோறூம் கிருத்திகை நட்சத்திரத்தன்று முருகப் பெருமானுக்கு அரளிப்பூ மாலை சாற்றுங்கள்.